குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்தி வருவதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். சில அரசியல் அனாதைகளும், வங்குரோத்து அடைந்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் விலகிக் கொள்ளுமாறு கட்சி பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறு நாட்டின் வேறு எந்தவொரு அரசாங்கமோ கட்சியோ இவ்வாறு பரிந்துரை செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் என வந்தால் அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சி என்ற பேதம் கிடையாது என்பதே இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.