குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒஸ்லோ பிரகடனத்திற்கு நிகரான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒஸ்லோ பிரகடனத்திற்கு நிகரானதாக அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட்டாக இணைந்து இந்தப் பிரகடனத்தை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.2002ம் ஆண்டு நோர்வேயின் ஒஸ்லோவில் இந்தப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்கப் பிரதிநிதிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் தலைமையிலான பிரதிநிதிகளும் ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டி முறையின் கீழ் தீர்வுத்திட்டமொன்று தொடர்பில் ஒஸ்லோ பிரகடனத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் காரணமாகவே படையினரின் கைப்பற்றியிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது