குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் மேடைகளில் இரண்டு தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது நல்லாட்சி அரசாங்கத்தின் முன்நகர்வுகளுக்கு இடையூறாக அமையும் என சபாநாயகர் ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரின் அழைப்பின் பேரில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
கடுமையான அரசியல் குரோத உணர்வுகளுடன் கூடிய தேர்தல் பிரச்சார முன்னெடுப்புக்கள் விரிசலை உருவாக்கும் என சுட்டிக் காட்டிய அவர், தாம் இங்கு அரசியல் பேசவில்லை எனவும், நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுப்பது குறித்த கரிசனையுடன் கருத்துரைப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை அமரர் மாதுலுவே சோபித தேரரின் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், சுயாதீனமான அடிப்படையில் தாம் இந்தக் கருத்துக்களை முன்வைப்பதாகவும் கூறிய அவர், குறிப்பாக அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் அணுகுமுறையை தயவு செய்து கைவிடுமாறு சுயாதீனமான நபர் என்ற ரீதியில் இரண்டு தலைவர்களிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.