ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் – மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்….
2006 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியல் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கைச்சாத்திட்டார்.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எதாஉட ஆரச்சிகே, காமினி ரொஹான் அமரசேகர, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவ ஆரச்சிகே டொன் என்டனி ஹரல்ட், இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம் வசந்தா ஜயசீலி கபுகம ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த புதிய ஆணைக்குழுவினால் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பின்வரும் மோசடிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
1. திறைசேரி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் வேறு ஏதேனும் நிதி நிறுவனங்களினால் நிதி பலம் பயன்படுத்தல் உள்ளிட்ட பங்கு மூலதனம் மற்றும் கடன்பெறும் வழிகளில் நிதியங்களை பயன்படுத்துதல் மற்றும் அத்தகைய நிதியங்களை முதலீடு செய்தல்.
2. மிஹின் லங்கா நிறுவனத்தை தாபித்தல், செயற்படுத்தல் மற்றும் முடிவுறுத்தல்.
3. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சர்வதேச விமான நிறுவனமான எமிரேட் நிறுவனத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்தல் மற்றும் அதற்கான காரணங்கள், அவற்றின் சிக்கலான பெறுபேறுகள்.
4. விமானங்கள் மற்றும் வேறு சொத்துக்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல், விற்பனை செய்தல் மற்றும் மீள வாடகைக்கு பெறுதல், பரிமாற்றம், விடுவித்தலுக்கான ஒப்பந்தங்களுக்கு வருதல், நீடித்தல் மற்றும் இரத்து செய்தல்.
5. ரூபா 50 மில்லியன் பெறுமதியை தாண்டிய விமானம் மற்றும் வேறு சொத்துக்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல், விற்பனை செய்தல், மீள வாடகைக்கு பெறுதல், கையளித்தல், பரிமாற்றம் விடுவித்தல் உள்ளிட்ட பொருட்கள், சேவைகள் கொள்முதல் மற்றும் விமான குழுமத்தை மீண்டும் தாபித்தல்.
6. பொருட்கள், சேவைகள் அல்லது வேறு விடயங்களை வழங்குவதற்கான ஆலோசகர்கள், நிறுவனங்கள் மற்றும் ஆட்களை அல்லது நிறுவனத்தை நியமித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு செய்தல்.
7. ஏனைய நாடுகளில் அலுவலகங்களை திறத்தல், பராமரித்தல் மற்றும் இடை நிறுத்தல்.
8. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள்.
9. ஆட்சேர்ப்பு, நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஓய்வூதியம் வழங்குதல், பணிப்பாளர் சபை பிரதான நிறைவேற்று அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட முகாமையாளர்களை நியமித்தல் உள்ளிட்ட மனித வள முகாமைத்துவம்.
10. நிதி அறிக்கையிடல், குறித்த கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்களுக்கேற்ப செயற்படுதல் மற்றும் நிதி மற்றும் செயற்படுத்தல் செயலாற்றுகை.