தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் கிடைத்த கேள்விக்கு ஆங்கிலத்தில் கொடுத்த பதிலின் தமிழாக்கம் –
கேள்வி:சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவையின் கருத்தென்ன? நீங்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்களா?
பதில்: இன்று 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ந் திகதி. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ந் திகதியில் இருந்து எழுபது வருடங்கள் பூர்த்தியாகி உள்ளன. 1948ல் ஆங்கிலேயரிடம் இருந்து எமக்கு சுதந்திரம் பெறப்பட்டதாக தமிழ் மக்களுக்குஅறிவிக்கப்பட்டது. அதன் பொருட்டு வெளிநாட்டு உள்ளீடல்கள் இல்லாத ஒரு மகிழ்ச்சிகரமான, திருப்தி தரும், செழிப்பார்ந்த நாடொன்று கட்டி எழுப்பப்படப் போகின்றது என்று தமிழராகிய நாம் எதிர் பார்த்தோம். சிங்கப்பூரைச் சேர்ந்த லீகுவான்யூ அவர்கள் பொருளாதார விருத்திக்கும் இன நல்லுணர்வுக்கும் எடுத்துக் காட்டாக அப்போதைய இலங்கையையே முன்னுதாரணமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஆனால் சிங்கள அரசியல் தலைவர்கள் வேறு கரவான எண்ணங்கள் உடையவர்களாக அப்போதிருந்தார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையினர் என்ற விதத்தில் சர்வ அரச அதிகாரங்களையும் ஆங்கிலேயரிடம் இருந்து அவர்கள் பெற்றிருந்தார்கள். அவற்றை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் சிங்கள இனத்தவர்களுக்கு எதிராகப் பாரபட்;சமாக அவர்கள்நடந்து கொண்டார்கள் என்ற பொய்யான காரணத்தைக் காட்டி சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இது உண்மைக் கூற்றல்ல. எப்பொழுதும் தகைமைக்கு முதலிடம் கொடுத்தவர்கள் ஆங்கிலேயர். ஆகவே அவர்கள் காலத்தில் திறந்த போட்டிப் பரீட்சைகளில் முதன்மையாகத் தேறிய தமிழர்கள் பல அரசாங்க வேலைகளிலும் மற்றும் சேவைகளிலும் கடமையாற்றி வந்தார்கள்.
ஆனால் தமிழ் மக்களை எல்லா விதங்களிலும் வலுவிழக்கச் செய்ய அவர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் இயற்றப்பட்ட போது தான் தமிழர்கள் அளவான சூடு கொண்ட வறுவல் பாத்திரத்தில் இருந்து அனலெறியும் அடுப்பில் விழுந்துள்ளமையை உணர்ந்தார்கள்.
இந் நாட்டின் வடகிழக்கில் சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தமை பற்றியும் அவர்கள் செம்மொழி ஒன்றினைப் பேசி வந்தார்கள் என்பதைப் பற்றியும் கவனத்திற்கெடுக்காமல்பெரும்பான்மையினரின் மொழி மட்டும் நாட்டின் மொழியாகவும் அரச மொழியாகவும் ஆக்கப்பட்டது. பல விதமான பாரபட்சம் மிகுந்த சட்டங்கள் (தமிழர்களுக்கு எதிராக) கொண்டு வரப்பட்டதுமல்லாமல் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய ஏழு மாகாணங்களில் தமிழர்கள் வாழ்ந்து வந்த அவர்களின் வாஸஸ்தலங்களில் இருந்து அவர்களை அடித்து விரட்ட கலவரங்களும் கலகங்களும் அப்போதைய அரசாங்கங்களினாலேயே முடுக்கி விடப்பட்டன.
இவற்றிலிருந்து ஒரு உண்மை புலப்பட்டது. தமிழர்கள் தமது சுதந்திரத்தை சிங்கள மக்களிடம் பறிகொடுத்தமை வெளிப்பட்டது. இன்றும் நிலைமை மாறவில்லை. நாட்டின் வடகிழக்கு மாகாணங்கள் முற்றுகையிடப்பட்ட பிரதேசங்கள் போல் பெருந் திரளான இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களின் அரசியல், சமூக, பொருளாதார செயற்பாடுகள் அனைத்தும் மத்தியின் கட்டுப்பட்டிலேயே இருந்து வருகின்றன. வடகிழக்கில் இருக்கும் தமிழ் மக்களின் செறிவைக் குறைத்து அங்கு பெரும்பான்மையினரின் உள்ளீடல்களையும் உறைவிடங்களையும் அதிகமாக்குவதே அரசின் நோக்கம் என்பது வெள்ளிடைமலையாகியுள்ளது.
ஆகவே வெள்ளையரிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று பொருளற்றதாகப் போய்விட்டது. ஏனெனில் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாங்கள் இன்று பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டுவிட்டோம். ஒரு முறையான சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகிர்வு பெற்றாலேயே அன்றி நாம் எமது பறி கொடுக்கப்பட்ட உரித்துக்களை மீண்டும் பெற முடியாது. ஆகவே பிப்ரவரி நான்காந் திகதியை எவ்வாறு தமிழர்களாகிய நாங்கள் கொண்டாட முடியும்? இவ் விடயம் சம்பந்தமாக எனது இணைத்தலைவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகின்றேன். காரணம் தமிழர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்றே நாம் திடமாக நம்புகின்றோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை