குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் காப்பாற்றி வருவதாக ,எக்கனமிக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்ய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், நாட்டின் தலைவர்கள் இருவரும் அதனைத் தடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மாறுபட்ட காரணங்களுக்காக பிரதமரும், ஜனாதிபதியும் கோதபாய கைது செய்யப்படக் கூடாது என கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் கோதபாயவை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது தாம் அதை தடுத்து நிறுத்தியதாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டிருந்தார். கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை திருப்தி படுத்தவும் கோதபாயவை ஜனாதிபதி காப்பாற்றி வருகின்றார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோதபாயவிற்கு ஆதரவளித்தால் சிறுபான்மையினரின் ஆதரவினை இழக்க நேரிடும் என்ற போதிலும், சுதந்திரக் கட்சியில் செல்வாக்கினை தக்க வைத்துக்கொள்ள கோதபாயவை பாதுகாப்பது அவசியமானதாக காணப்படுகின்றது. 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள நிலையில் கோதபாயவை கைது செய்வது ஆபத்தாக அமையும் என பிரதமரும் கருதுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.