இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்கான போராட்டம் கடந்த ஆரம்பித்து இன்றுடன் 339 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், மௌன விரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார்.
பூர்வீக மக்கள் அகதி வாழ்வில் வரும் நிலையில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவா எனவும் இதனை தாம் எதிர்ப்பதுடன் வெறுக்கின்றோம் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணி கடந்த டிசம்பர்; படைத்தரப்பினால் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் மீதியாகவுள்ள 104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இன்று ஒரு அமைதியாஎ எதிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சுதந்திரம் இல்லாத நிலையில் என்ன சுதந்திரதினம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.