குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடாபில் விசாரணை நடத்துவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கினைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரபல ஊடகவியலாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான உபாலி தென்னக்கோன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான அரசியல் விருப்பம் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ளார். விசாரணைகள் சரியான முறையில் நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தவறியுள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டமைக்காக அவர்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரி, ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என உபாலி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.