குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிங்கள மக்களின் கட்சி இல்லை என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்தெரிவிக்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் அரசியல் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருவதற்காக வந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரவு தந்தன. அன்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உதவிய வடக்கு மக்களுக்கு இந்நேரத்திலும் நன்றிகளை தெரிவிக்கிறேன். வடக்கு தெற்கு எனும் பேதம் இல்லாமல் என்னை ஜனாதிபதியாக்கிய இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிங்கள மக்களின் கட்சி என சொல்வது தவறானது. இந்த கட்சி பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிறிமோவோ பண்டாரநாயக்க தலைமை தாங்கினார். தலைமைதாங்கிய கால பகுதியில் யாழ்ப்பாணம் வந்த போது யாழ்ப்பாண மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இப்பகுதி மக்கள் வாக்களித்தனர்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிங்கள மக்களின் கட்சி அல்ல. இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் கட்சி. இந்த கட்சி சிங்கள மக்களின் கட்சி எனில் எவ்வாறு வடக்கில் இந்த கட்சியில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட முடியும் ? எனவே நாட்டில் மத இன ரீதியாக யாரும் பிரிந்து நிற்க வேண்டாம். என மேலும் தெரிவித்தார்.