திருமண விவகாரங்களில் கட்ட பஞ்சாயத்துகளின் தலையீட்டை தடுக்க உயர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில், சாதி மற்றும் சமுதாய அமைப்புகள், கட்ட பஞ்சாயத்தாக செயல்பட்டு, கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றன.
இந்த பஞ்சாயத்துகள் கலப்பு திருமணம் செய்பவர்களை கௌரவ கொலை செய்ய உத்தரவிட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு செயல்படும் கட்ட பஞ்சாயத்துகளை எதிர்த்தும், கௌரவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் ‘சக்தி வாகினி’ என்ற அமைப்பு உசசநீதிமன்றில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை நீதிமன்றில் வந்துள்ள நிலையில் நீதிபதிகள், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் கட்ட பஞ்சாயத்து தீவிரமாக செயல்படும் 3 மாவட்டங்களில் நிலைமையை கண்காணிக்கப் போவதாக தெரிவிதுள்ளனர். அத்துடன் கலப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் மீதான தாக்குதல், முற்றிலும் சட்ட விரோதம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது கட்ட பஞ்சாயத்து சார்பில் முன்னலையான சட்டத்தரணி கட்ட பஞ்சாயத்துகள், சமுதாயத்தின் மனசாட்சியாக செயல்பட்டு கடமை ஆற்றுவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து கட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் இதுபோன்ற விவகாரங்களில் கட்ட பஞ்சாயத்துகள் தலையிட முடியாது எனவும் சமுதாயத்தின் மனசாட்சியாக செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் கலப்பு திருமணங்களில் கட்ட பஞ்சாயத்து அமைப்புகளின் இதுபோன்ற தலையீடுகளை தடுக்க உயர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைப்போம் எனவும் எச்சரித்து வழக்கினை ஒத்திவைத்துள்ளனர்.