தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சத்தில் இன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி கொடுத்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்து நடராஜர் மற்ற உருத்திர தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக்கி, உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் தர்சித்து பக்தர்கள் மெய் சிலிர்ப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோவிலின் தல விருட்சமா அரச மரம் திகழ்கிறது. இந்நிலையில், வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சமான அரச மரத்தில் இன்று இரவு திடீரென தீப்பற்றியது. இதையறிந்த பக்தர்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கோவிலுக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே, கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.