மாயை…
.
இலையுதிர்கால சருகுகளாய்
உலகமெங்கும் சிதறினமே
அம்ம நீ போனது எங்கடி
அனுதினம் உன்னையே தேடினேன்.
இனிவழி ஏதென நோகையில்
இணையத்தில் வந்து கண் சிந்தினாய்.
நீயுமா தேடினாய் கண்ணம்மா?.
எல்லை இலாத மின் அம்பலம் அங்கு
ஏங்கும் மனசுகள் சங்கமம்
உந்தன் இருப்பை உணர்வதில்
உயிரே மயங்குது கண்ணம்மா
.
இணைவெளியிடைக் கண்ணம்மா
உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன்
அகதி அழிந்திடும் அன்பிலே
ஆதரவான மொழியிலே.
ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை
ஆசை சிவந்த இதழ்களிலே
காட்ச்சியும் பேச்சுமே கரைகளாய்
மாயக் காதல் நதியினில் நீந்தினோம்.
சித்து நிலையடி கண்ணம்மா நாம்
சேர்ந்து சிறகை விரிப்பதால்.
இது பித்து நிலையடி கண்ணம்மா உயிர்
படைத்திடும் தேவரின் வேட்கையால்
.
2
,
உன் பந்தாடும் காதலால்
என்னையும் உயர உதைதாய்
பிரபஞ்ச பெரு வெளியில்
உருட்டிவிட்டாய்.
.
என் அன்பே
பூச்சுட்டி அலங்கரித்த
பண்பட்ட காமமே
காதல் என வாழாதிருந்தேனே.
பெண் பல்லாயிரம் ஞானக் கதவுகளென
அறியாது இழந்தேனே கண்ணம்மா.
மாய மொழிகளால் நீ அணைக்கையில்
என் பாதங்களின்கீழ்
காற்பந்தாய்ப் பூமி சுழல
உயர்கிறதென் கவிமனசு.
,
3
.
முகநூலை அணைத்துவிட்டு
சன்னல் திறந்தால்
வெளியே ஒளி அலையும்
கூதல் பனி மலைகளில்
மலருமுன் மார்புகள் அசைக்கும்
பொற் பதக்கமாய்
காலைச் சூரியன் உதிக்கிறது.