“ராஜதந்திரிகளுக்கு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் சிறப்புரிமை உண்டு”
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பிரியங்க பெர்னாண்டோவின் ராஜதந்திர பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் ரயான் மற்றும் சியோபயின் மெக்டொனா ஆகியோர் கோரியிருந்தனர். இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் திஸாநாயக்க கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தாம் மறைந்த காமினி திஸாநாயக்கவின் புதல்வர் எனவும், தமது தந்தையை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர் எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய பல நாடுகளைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
ராஜதந்திரிகளுக்கு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் சிறப்புரிமை காணப்படுவதாகவும், தூதரக வளாகத்திற்குள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தூதுரக வளாகத்திற்குள் இருந்து கொண்டு செய்த காரியமொன்றுக்காக அவரைத் தண்டிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.