இன்று நடைபெறுகின்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் நேரத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார்.
கிராம நிருவாக அதிகாரத்திற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.
எனினும், இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இலங்கை நேரப்படி காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியது. உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.
மொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மத்தியிலிருந்து 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக எண்ணாயிரத்து 356 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 13 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்களிப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.