முல்லைத்தீவு – வற்றாப்பளையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்தவர் கைது:-
புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் பிடித்த இருவர் காவல் நிலையத்தில்…
கண்டி, பூஜாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வக்கெடுப்பு நிலையத்தில் புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாக்குச்சாவடியின் பிரதானியால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளார்.
இதேபேவளை புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த மற்றொரு நபர் அளுத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய அவர் காவற்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 14ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வற்றாப்பளையில் கசிப்பும் கள்ளும்...
முல்லைத்தீவு – வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்
இவர், கட்சி ஒன்றின் வற்றாப்பளை வட்டரா வேட்ப்பாளர் ஒருவரின் ஆதரவாளர் என அறியமுடிகின்றது முள்ளியவளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தேர்தலில் சண்டித்தனம்..
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் பிரதேச சபை உறுப்பினரான அநுர பண்டார மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் இணைந்து, இன்று காலை தாக்குதலை நடத்தியதாக கலஹா ஹேவாஹெட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சண்முகராஜ் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த அநுர பண்டாரவும் அவரது உறவினர் ஒருவரும் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஏறாவூரில் 3 தாக்குதல்கள்..
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தினமான இன்று, ஏறாவூரில் தொடர்ச்சியாக மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மூவர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் மேலும் ஒரு ஆதரவாளரும் தாக்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இரு தாக்குதல்கள்..
முல்லைத்தீவில் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில், இரு கட்சியின் வேட்பாளர்கள் இணைந்து மற்றொரு கட்சியின் வேட்பாளரை தாக்கிய சம்பவம் புதுக்குடியிருப்பு பகுதியிலும், முள்ளியவளை பகுதியில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் ஒருவர் வாக்கு சாவடியின் முன் மேட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, காவற்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – பெதிகமுவ பிரதேச சபையில் இரு வன்முறைச் சம்பவங்கள்..
மாத்தறை – பெதிகமுவ பிரதேச சபையில் இரு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வாக்குப்பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்க முற்பட்டபோது அங்கிருந்த பொதுஜன பெரமுன கட்சியின்ஆ தரவாளர்கள் குழப்பம் ஏற்படுத்தியதனால் அங்கு சிறு பதற்றநிலை உருவாகியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, வெலிகந்த சிங்கபுர பகுதியில் மதுபானம் கொடுத்து வாக்குச் சேகரிப்பு நடவடிக்கைகள் இடபெற்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈபிடிபியின்தம்பாட்டி வேட்பாளர் மீது தாக்குதல்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈபிடிபி)யின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் உள்ள குறித்த வேட்பாளரின் வீட்டிற்குள், புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்
தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைது
தேர்தல் தொடர்பிலான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்தே, அவ்விருவரையும் இன்றுக்காலை 5 மணியளவில் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கையேடுகளை விநியோகித்த வேட்பாளர் கைது
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராகிராம் ஊவா குடா ஓயா பிரதேசத்தில், பட்டியிலிடப்பட்ட வேட்பாளர் ஒருவர் தன்னுடை வாகனத்தில் சென்று, வாக்காளர்களுக்கு கையேடுகளை விநியோகித்துகொண்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டார். இன்றுக்காலை 8:30 மணியளவிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.
ஐ.தே.க வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்
கற்பிட்டி பிரதேச சபைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியும் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது, நேற்றிரவு 11:30 மணியளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது, வாகனத்தில் பயணித்துகொண்டிருந்தவர்களில் மூவர் காயமடைந்துள்ளனார். சம்பவம் புத்தளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.