நாடளாவிய ரீதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை நான்கு மணியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், வாக்கெண்ணும் பணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதன் முடிவுகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இரண்டு மணி வரையான ஏழு மணிநேர வாக்குப் பதிவில், கம்பஹாவில் 65%, களுத்துறை மற்றும் மாத்தறையில் 55%, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் குருணாகலையில் 65% மற்றும் புத்தளத்தில் 69% என வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் 60%, அம்பாறை மற்றும் மொனராகலையில் 65% மற்றும் பொலனறுவையில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கண்டியில் 52%, பதுளையில் 65%, நுவரெலியவில் 60% மற்றும் காலியில் 67% என வாக்குகள் பதிவாகியுள்ளன.