குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவது குறித்து தீர்மானம் எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ பெற்றுக் கொண்ட வாக்குகளை விடவும் குறைவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய காரணத்திற்காக முன்கூட்டியே தேர்தல்களை நடத்தவோ அல்லது மஹிந்தவை பிரதமராக நியமிக்கவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியோ பிரதமரோ மஹிந்தவை பிரதமராக்குவது குறித்து தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.