தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று அனுமதி வழங்கியுள்ளார். படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஒரு வருடமாக குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருபகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஸ்டித்த மக்கள், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குச் செல்ல முற்பட்டவேளை, அம்மக்களை காவல்துறையினர் தடுத்தமையால் ஏற்பட்ட குழப்ப நிலையினையடுத்து, குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 5 பேருக்கு எதிராக காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.