இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற இழைப்புக்கள் குறித்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த அஸ்மா ஜஹான்கீரின் இழப்பு ஈழத் தமிழர்களின் நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளராக நவநீதம்பிள்ளை செயற்பட்டிருந்த காலத்திலேயே இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக் குழுவில் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற சட்டத்தரணியும் ஆசியாவின் மிகச் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளருமான அஸ்மா ஜஹான்கீர் தேர்வு செய்யப்பட்டார்.
அஸ்மா ஜஹான்கீர் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்த தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் நிகழ்த்திய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பிட்டதுடன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்த மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவ் அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த அஸ்மா ஜஹான்கீர் இலங்கை மற்றும் சர்வதேச ஊடங்களில் இவ் விடயம் தொடர்பில் கட்டுரைகளையும் எழுதியிருந்தார். இருதய நோய் காரணமாக தனது 66ஆவது வயதில் அஸ்மா ஜஹான்கீர் காலமானார். இவரது இழப்பு நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழ் இனத்திற்கு ஒரு பாதிப்பே என்று மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.