தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.வினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டம் கட்டமாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.