176
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்காத இராத்திரிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த தீர்வுமற்று, ஒரு பதிலுமற்று, உண்மையையும் நீதியும் மறுக்கப்பட்டு எத்தனையோ உறக்கமற்ற இராத்திரிகளை இந்த சனங்கள் கடந்துவிட்டனர். இவர்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரிகள் ஆகிவிட்டன.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை கடந்து செல்லும்போதெல்லாம் நினைத்துக்கொள்ளும் விடயம் இது. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களின் முன்பு. 1966 சத்ஜெய இடப்பெயர்வுக்கு முன்பு. அந்தக் கோயிலில் சனங்கள் நிறைந்திருக்கும் திருவிழாக் காலத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கோயில் வளாகம் முழுவதும் நிறைந்திருப்பார்கள். விடிய விடிய சனக் கூட்டத்திற்கு குறைவிருக்காது. பிற்காலத்தில் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆலயத்தில் வெகு சிலரையே காண முடிந்தது.
வன்னியில் இப்போதும், வற்றாப்பளை, கனகாம்பிகை அம்மன் புளியம்பொக்கனை, புதூர் நாகதம்பிரான் ஆலயங்களுக்கு மக்கள் அலை அலையாக செல்வதுண்டு. ஆனால் கந்தசுவாமி ஆலயத்தில் திருவிழாவின்போது தேர் இழுக்கக்கூட ஆட்கள் இல்லை. சிறுவயதில் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் விடிய விடிய முழித்திருந்து நிகழ்வுகள் பார்ப்பதும் சிவராத்திரி நாட் களில் சைவசமய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்வதும் மறக்க முடியாத நினைவுகள்.
உயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, போட்டியில் மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றதும், எனக்கு அடுத்த வருடத்தில் கல்வி கற்று விமானத்தாக்குதலில்(தமிழ்ச்செல் வன் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது வீதியில் சென்ற நிர்மலசிங்கனின் தலை துண்டிக்கப்பட்டது) கொல்லப்பட்ட நிர்மலசிங்கனுடன் விடிய விடிய ஆலயத்தில் படித்துக் கொண்டிருந்ததும் என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.
நாங்கள் சைவர்கள். நீங்கள் என்ன மதம் என்று யாராவது கேட்டால் நான் சைவம் என்றே பதில் அளிப்போம். இலங்கை அரசு எங்களை அழிப்பது இந்துக்கள், சைவர்கள் என்ற அடையாளங்களின் பொருட்டுமே. உண்மையில் நாம் இந்துமதவாத்தினாலும் பௌத்த சிங்களவாதத்தினாலும் இரு முனைகளாலும் அழிக்கப்படும் சைவர்கள். எங்கள் ஆலயங்கள்மீது விமானங்கள் குண்டுகளை கொட்டின. போரின்போது கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளுடன் எங்கள் ஆலயங்களும் அழித்து நொருக்கப்பட்டன.
இன்றைக்கு தென்னிலங்கையில் உள்ள சைவ ஆலயங்கள் எல்லாம் முகவரி இழந்துபோய்விட்டன. கதிர்காமம் இன்றைக்கு கதிர்காம என்றாகிவிட்டது. 1000 வருடங்களின் முன்னர் சோழ மன்னன் கட்டிய பொலனறுவைச் சிவன் கோயிலைப் பார்க்கும் போது அழிந்தும் அழியாமலும் இருக்கிற ஈழத் தமிழ் இனம் போல உள்ளது. தென் பகுதியில் இருந்த சைவ அடையாளங்களை அழித்தும் துடைத்தும் திரித்தும் வந்த சிங்களப் பேரினவாத மதவாதிகள் வடக்கு கிழக்கு எங்கும், சைவ ஆலயங்களின் அருகிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வைத்து தமிழ் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளுகின்றனர்.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். ஈழம் தொன்மையான சைவ மரபுகளை கொண்ட நாடு. ஈழமெங்கும் பரவிக் காணப்படும் ஈச்சரங்கள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன. வரலாறு முழுதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது சைவ ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் உலகமயமாக்கல் சூழலில் ஆலயங்களுடனான நெருக்கமும் குறைந்தது.
தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான பண்பாட்டுப் புரட்சியின்போது சைவ மரபுகள் குறித்த கருத்துக்களும் வெளிப்பட்டன. பகுத்தறிவுத் தந்தை பெரியாரை பெற்றெடுத்த தமிழகம் சைவ மரபுகள் குறித்தும் சிவன் குறித்தும் சிவபுராணம் குறித்தும் சிந்திக்கும் ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது என்றால் முற்றாக சிங்கள மதவாத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர்களாகிய நாம் அது குறித்து மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உண்டு.
சைவ ஆலயங்களின் அருகே புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் திட்டமிட்டு எழுப்பப்பட்டு, வரலாறும் பண்பாடும் அழிக்கப்படுகிறது. பண்பாடு அழியும்போது வரலாறும் இனமும் அழிகிறது. இன்றைக்கு சோழர்களுக்கு முந்தைய தலங்களாக திருக்கேதீஸ்வரமும் திருக்கோணேஸ்வரமும் எங்கள் வரலாற்றை இடித்துரைக்கும் தலங்களாக உள்ளன. இதன் காரணமாகவே திருக்கேஸ்வரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் சுற்றி மதப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் இன்று வசிக்கிற மக்கள், இளைஞர்கள் ஆலயங்களை நோக்கியும் எங்கள் வரலாறு நோக்கியும் தொன்மம் நோக்கியும் நகர வேண்டிய அவசியமுண்டு. முழுக்க முழுக்க பல்வேறு பொறிகளால் சுய அடையாளங்களும் பண்பாடும் அழிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் மனம் அவதியுறும் இன்றைய கால கட்டத்தில் எமது பண்பாடாக அமைந்த அமைதி தரும் ஆலயங்களுக்குள் இருப்பதும் எமது கலை கலாசார நிகழ்வுகளை அங்கு முன்னெடுப்பதும் அவசியமானது. வன்னியில் வெறிச்சோடிய ஆலயங்களின் முன்னால் கண்டிய நடனங்களை நிகழ்த்தும், பிரித் ஓதும் நிலைமை ஏற்படாது.
ஈழத்தில் உள்ள சிவாலங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப் படுகிறது. தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிவராத்திரி என் பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு.
இன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள்,அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகி
ஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள். சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் கேப்பாபுலவில், கிளிநொச்சியில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர்.
இன்றைக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிவராத்திரிக்காக வரும் பக்தர்கள் அந்த மக்களுக்காகவும் விழித்து நோன்பிருப்பார்கள். பிரார்த்தனை என்பது உள்ளத்தினால் அவாவுகின்ற, உள்ளத்தை விழிக்கச் செய்கின்ற நிகழ்வு. இந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கின்றனர். இந்த மக்களின் உறங்காத இராத்திரிகளுக்கு முடிவு வரட்டும். இதைப்போல விடிய விடிய உறக்கமற்றபடி அலையும் ஈழத் தமிழ் இனத்தின் உறங்கா இராத்திரிகளுக்கு முடியட்டும் என இன்றைய நாளில் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love