குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் இந்து ஆலயங்களில் வைக்கப்பட்டுருந்த இந்து கடவுளர்களின் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று சிலைகள் திருடி செல்லப்பட்டுள்ளன. இந்துக்கள் சிவராத்திரி தினத்தினை நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கவிருந்த நிலையில் நேற்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றள்ளன.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த 1988ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட லிங்கேஸ்வர ஆலயத்தில் இருந்த மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளன. மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியில் கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக இருந்த ஆலையடிப் பிள்ளையார் ஆலய பிள்ளையார் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாட விமான ஓடு பாதைக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் இதற்கு முன்னர் பல தடவைகள் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்ட போதும் , அப்பகுதி மக்கள் சேதமடைந்த ஆலயத்தை புனரமைத்து வழிபட்டு வந்தனர். அந்நிலையில் குறித்த ஆலயத்தில் இருந்த பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது.
சிவராத்திரி விரதம் நேற்றைய தினம் கடைப்பிடிப்பதற்கு ஆலயங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளைகளில் இந்து விக்கிரங்கள் உடைக்கப்பட்டமை மற்றும் திருடப்பட்டமையால் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.