பொப்புயுலர் புரண்ட் ஒப் இந்தியா (popular front of India ) அமைப்பிற்கு தடை விதிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பொப்புயுலர் புரண்ட் ஒப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது கேரளாவில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த அமைப்பிற்கு தடை விதிக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளதாகவும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நடைபெறவுள்ள மாநில காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் விவாதிக்கப்படும். அதன் பின் தடை விதிப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு கேரளாவில் பேராசிரியர் டி.ஜே ஜோசப் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டமை உட்பட்ட வழக்குகளில் பொப்புயுலர் புரண்ட் ஒப் இந்தியா அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.