பஞ்சாப் நஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்தவர் என்ற குற்றச்சாட்டில் இன்று இந்தியா முழுவதும் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி காணப்படுகிறார். யார் இந்த நிரவ் மோடி? நடிகை பிரியங்கா சோப்ரா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தி இந்து வெளியிட்டுள்ள பதிவுகளை நன்றியுடன் பிரசுரிக்கிறது குளோபல் தமிழ் செய்திகள்.
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தவகையில் ரூ.11, 600 கோடி மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், வைரவியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
நிரவ் மோடி என்ற பெயரில் பல்வேறு நகைக்கடைகள் மும்பை, புதுடெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் வைரங்களை ஏற்றுமதி செய்யும் பெரிய வைர வியாபாரியாகவும் நிரவ் மோடி இருந்து வருகிறார்.
இவரின் நகைக்கடைகள் அனைத்துக்கும் சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக பாலிவுடன் நடிகை பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார். இந்நிலையில், நிரவ் மோடி குறித்த விவகாரம் பெரிய அளவில் உருவானதையடுத்து, அவர் மீது பிரியங்கா சோப்ரா புகார் கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “ நிரவ் மோடியின் பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்த வகையில் தனது இன்னும் முறையான ஊதிய நிலுவை தொகையை நிரவ் மோடி தரவில்லை. அவரின் நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பையும், வர்த்தகம் பெருக பிரசாரம் செய்தேன். ஆனால், எனக்கு ஊதியம் முறையாக தராத காரணத்தால் அவர்கள் நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவைப் போல் நடிகர் சித்தார் மல்ஹோத்ராவும் இந்த நிறுவனத்துக்கு விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். அவர் கூறுகையில், “ நீரவ் மோடி நிறுவனத்துக்காக பிரியங்கா சோப்ரா நடித்த விளம்பர படங்களுக்கான ஊதியத் தொகையை சட்டப்படி வழக்குதொடர்ந்து வாங்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ரூ.11,600 கோடி மோசடிசெய்த நிரவ் மோடி
ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர், இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நகைக்கடைகளுக்கு சொந்தக்காரர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற புகழோடு வலம் வருபவர் நிரவ் மோடி. அமெரிக்காவில் உள்ள நகைக் கடையை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கத்தை நீரவ் மோடி ஏற்படுத்தியவர். டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்து தனது இருப்பை வலுப்படுத்தியவர் நிரவ் மோடி.
யார் இந்த நிரவ் மோடி?
குஜராத் மாநிலத்தில் ஒரு வைர வியாபாரியின் குடும்பத்தில் பிறந்தவர் நிரவ் மோடி. குஜராத்தில் பிறந்தது என்றாலும் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆன்ட்ரப் நகரில் நிரவ் மோடி வளர்ந்தார். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்ததால், புகழ்பெற்ற வார்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் படித்தார். ஆனால், வைரத் தொழிலின் மீதான மோகத்தால் படிப்பை பாதியில் கைவிட்டு தனது மாமாவுடன் புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து வைரத் தொழிலில் ஈடுபட்டார்.
அதன்பின் நிரவ் மோடி ஜுவல்லரி என்ற நகைக்கடையை டெல்லியில் இரு இடங்களிலும், தெற்கு மும்பையில் கலா கோடி என்ற இடத்திலும் தொடங்கினார். அதன்பின் இவரின் தொடர்பு பல்வேறு முக்கிய நபர்களுடனும், அரசியல்வாதிகளும் விரிவடையவே இவரின் வர்த்தகமும் விரிவடைந்தது.
கடந்த 1999ம் ஆண்டு பயர்ஸ்டார் டைமன்ட் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். அதன் பின் நீஷல் என்டர்பிரைசஸ், பாரகான் ஜூவல்லரி, பாரகான் மெர்கன்டைசிங், பஞ்சன்யா டைமன்ட் ஆகிய நிறுவனங்களை வேறு சிலருடன் இணைந்து நிரவ் மோடி கூட்டாக தொடங்கினார்.
நீரவ் மோடி வைர வியாபாரத்திலும், நகைக் கடைத் தொழிலிலும் அசுர வளர்ச்சி அடைவதற்கு அவரின் சகோதரர் நிஷால், மற்றும் மாமா மெகுல் சோக்ஸியும் காரணமாகும். இதில் மெகுல் சோக்ஸி கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், என்ட்லெஸ், ஜேஸ்மின், முகல் மற்றும் அனிரா கட் ஆகிய சிறப்பு மிக்க வைரங்களுக்கு காப்புரிமையும் நிரவ் மோடி பெற்று அதை தயாரித்து வந்தார். இதனால் சர்வதேச அளவில் நிரவ் மோடி தனதுவர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த காப்புரிமை வசதியாக இருந்தது.
நிரவ் மோடியின் வர்த்தகம் சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேடிசனிலும், லண்டனில் பாண்ட் ஸ்டிரீட் வரையிலும் நகைக்கடை திறந்தார். கடந்த 2015ம்ஆண்டு நியூயார்கில் நிரவ் மோடியின் நகைக்கடையை டொனால்ட் டிரம்ப் திறந்து வைத்துள்ளார்.
மேலும், ஹவாய் முதல் மக்காவு, ஹாங்காங், பெய்ஜிங் ஆகிய நகரங்களிலும் அடுத்தடுத்து நிரவ் மோடி தனது நகைக்கடையை விரிவுபடுத்தி சர்வதேச தொழிலதிபராக, வர்த்தகராக நிரவ் மோடி வலம் வந்தார். இப்போது நிரவ் மோடிக்கு குஜராத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நகைக்கடைகளும், வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன
2017ம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகையில் மிக இளம் வயது கோடீஸ்வரர் பட்டியலிலும் நிரவ் மோடி இடம் பெற்றார். சர்வதேச அளவில் நிரவ் மோடியின் நகைகளுக்கு தூதுவராக பாலிவுடன் நடிகை பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார். மேலும், தான் வடிவமைக்கும் நகைகளை பிரபலப்படுத்த ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகைகள் டகோடா ஜான்சன், டாராஜி பி ஹென்சன் ஆகியோரை பயன்படுத்தியுள்ளார்.
நீரவ் மோடியும், அம்பானி குடும்பத்தாரும் ஒருவகையில் நெருங்கிய உறவினர்கள். அதாவது அனில் அம்பானியின் சகோதரியின் மகள் இஸ்ஹிதா சாய்கோகரை நிரவ் மோடி தனது சகோதரர் நிஷாலுக்கு மணம் முடித்து வைத்துள்ளார். இவர்களின் திருமணம் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகள் வெளியானபின், நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால், ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.