ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத எந்தவொரு வேட்பாளர்களையும் தவிர்க்காது சகலரையும் ஒன்றிணைத்து கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான தமது பிரதிநிதிகளாக நியமிப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பீ.டி.பீ ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அபேட்சகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி , ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளற்ற அரசியலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குறுதியை பாதுகாத்து முன்னோக்கி செல்ல சகல பிரதிநிதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தவாறு சரியான பாதையில் பலமான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் இதன்போது உரையாற்றினர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி. திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.