குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி பூநகரி இரணத்தீவு செபமாலை மாதாவின் வருடாந்த தவக்கால யாத்திரை வழிபாடு கடற்படையினரின் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று(16) காலை இடம்பெற்றுள்ளது.
தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று(17) 293 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இரணைத்தீவில் உள்ள வரலாற்று பழமைமிக்க தேவாலத்தில் இடம்பெற்ற வருடாந்த தவக்கால யாத்திரை வழிபாட்டிற்கு கடற்படையினர் கடும் பாதுகாப்பு மத்தியில் மூன்று நாள் தங்கியிருந்து வழிபாடுகளை மேற்கொள்ள மக்களை அனுமதித்திருந்தனர். இதனையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட இரணைத்தீவு மக்கள் இரணைமாதாநகரில் இருந்து படகுகள் மூலம் இரணைத்தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு கடற்படையினர் பொது மக்களை ஆலய வளாகத்தை தவிர வேறு எங்கும் செல்லவிடவில்லை என்றும், தங்களின் காணிகளை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது மக்கள் பெண்கள் தங்களின் இயற்கை கடன்களை மேற்கொள்ள முடியாதளவுக்கு கடற்படையினர் சுற்றியிருந்ததாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல வருடங்களுக்கு பின் மிகவும் ஆர்வத்துடன் திருவிழாவுக்குச் சென்று தங்களின் காணிகளையும், வீடுகளையும் பார்iவிட்டு வரலாம் என்றும் தங்களின் பிள்ளைகளுக்கும் வீடுகளையும் காணிகளையும் ஒரு தடவையாவது காட்டிவிடலாம் என்றும் கனவுகளோடு சென்ற எம்மை கடற்படையினர் ஆலய வளாகத்தை நகரவிடவில்லை என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதும் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் வருடந்தோறும் ஆலயத்திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கும் கடற்படையினர் எங்களை இரணைத்தீவில் மீள குடியேறவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இவ்வருடத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பொது மக்கள், மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.