நமது உணர்வை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு. ஓவியர்கள் ஓவியங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு அசாத்திய ஓவியர்தான் அப்தல்லா அல் ஒமரி (Abdalla al omar.) இவர் சிரிய நாட்டுக்காரர். இவரது ஓவியங்கள் உலகின் மனச்சாட்சியை உலுப்புகிறது.
உலக நாடுகளின் தலைவர்களை அகதிகள் போல பார்க்க நேரிட்டால் அதிர்ச்சிதானே வரும். அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்தல்லா. சிரியாவின் வலியை, சிரிய நாட்டு மக்கள் சந்தித்து வரும் அவலத்தை அவர் உலகுக்கு மிக மிக எளிமையாக அதே சமயம், மிக பலமான பதிவினை தனது வித்தியாசமான ஓவியங்கள் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிரியாவின் அவலத்தை ஓவியங்களாக வடிக்கும் இவர் பல புகழ் பெற்ற உலகத் தலைவர்களை அகதிகளாக சித்தரித்து தனது ஓவியங்கள் மூலம் சர்வதேச நாடுகளின் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்தது. லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். அவர்களில் அப்தல்லாவும் ஒருவர். பிரஸ்ஸல்ஸ் போய் தஞ்சம் புகுந்தார் அப்துல்லா. அங்கு போன பின்பே அவருக்குள் ஆன்ம வேகம் வெளிக்கிழம்பியது. தனது இயலாமை, தனது மக்களின் துயரம் ஆகியவற்றை உலக நாடுகளிடம் கொண்டு செல்ல என்ன வழி என்று யோசித்தபோது கலை அவருக்குக் கை கொடுத்தது.
அதன் விளைவு அவர் சிரிய துயரத்தை ஓவியங்களாக வடிக்க ஆரம்பித்தார். உலகத் தலைவர்கள் பலரை அகதிகளாக தனது ஓவியத்தில் சித்தரித்து, சிரிய அகதிகளோடு அகதிகளாக அவர்களையும் கலந்து வரைய ஆரம்பித்தார். இப்படி வரைந்த ஓவியங்களை வைத்து “The Vulnerability Series” என்ற பெயரில் பிரஸ்ஸல்ஸில் கண்காட்சியும் நடத்தினார். அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் ஆகியோரை அகதிகளாகப் பார்த்தவர்கள் அதிர்ச்சியும், அதேசமயம், சிரிய மக்களின் உணர்வுகளையும் உள்வாங்க ஆரம்பித்தனர். சிரிய நிலைமையை உண்மையாக விளக்கிய ஓவியங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியுற்றனர், உண்மைகளை உணர ஆரம்பித்தனர்.
இதுகுறித்து ஓவியர் அப்தல்லா கூறுகையில் “தங்கள் கண் முன்பு நடப்பதை தடுக்கத் தவறிய தலைவர்கள் இவர்கள். எனவே இவர்களை சக்தி வாய்ந்தவர்களாக நான் கருத முடியவில்லை. எனவேதான் இப்படி ஓவியமாக மாற்றினேன்”, என்றார் அப்துல்லா.
இவரது ஓவியங்களில் டிரம்ப்பும் சரி, பிற தலைவர்களும் சரி அவர்களுக்குரிய கவர்ச்சியில் இருக்க மாட்டார்கள். அதிலிருந்து விலகி படு மோசமான நிலையில் உள்ள ஒரு அகதியாகவே காட்சி தருகிறார்கள். அந்த அளவுக்கு தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் இவர்களது ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் அப்தல்லா.
டிரம்ப் அழுக்கு டி சர்ட்டுடன், சோர்வடைந்த முகத்துடன், முதுகில் துணி மூட்டையை சுமந்தபடி, ஒரு சிறு பெண் குழந்தையை சுமந்தபடி காட்சி தருகிறார். பாஷர் அல் அஸ்ஸாத்தோ தண்ணீரில் பாதி முழ்கிய நிலையில் காணப்படுகிறார். சிரிய மக்களின் துயரத்திற்கு இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. தீர்வு வரும் தான் தீட்டும் ஓவியங்களும் தொடரும் என்று சோக முகத்துடன் கூறுகிறார் அப்தல்லா.