ஏற்கெனவே வாராக்கடன், லாபக்குறைவு போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு இதுபோன்ற நிதி மோசடிகள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,600 கோடிக்கு தொடங்கிய நிரவ் மோடியின் மோசடி விவகாரம், ஒவ்வொரு வங்கியாக நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்த மாதம் வரை பிரதமர் மோடியுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிரவ் மோடி, இன்று மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்.
சர்வதேச அளவில் பல்வேறு நகைக்கடைகள், உள்நாட்டில் பல்வேறு கிளைகள் கொண்டிருந்தும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற வங்கி மோசடிகளும், ஆயிரக்கணக்கில் தனிமனிதர்கள் செய்யும் மோசடிகளும் புதிது இல்லை. ஹர்சத் மேத்தாவில் தொடங்கி, ராமலிங்க ராஜு, விஜய் மல்லையா, அப்துல் கரீம் தெல்கி என நீண்டு இன்று நிரவ் மோடி வரை வந்திருக்கிறது.
ஹர்சத் மேத்தா
பங்குச்சந்தையின் அமிதாப் பச்சன் என்று கடந்த 1990களில் அழைக்கப்பட்டவர் ஹர்ஷ்த் மேத்தா. குஜராத்தில் பிறந்த ஹர்ஷத் மேத்தா, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பை முடித்து, பங்குச்சந்தை வியாபாரத்தில் இறங்கினார். குறுகிய நாட்களில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற இவரின் எண்ணம், பங்குசந்தையையே புரட்டிப்போட வைத்தது.
சந்தையில் விலைகுறைவான பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கி, அதில் செயற்கையாக விலை ஏற்றத்தை உண்டாக்கி கோடிக்கணக்கில் பணம் குவித்தார். இவரின் நடவடிக்கையால், பங்குச்சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டதாக மாயத்தோற்றம் உருவாகி, பங்குகளின் விலை எகிறியது.
இதில் கிடைத்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை, வெளிநாட்டு கார்கள், மும்பை வோர்லி கடற்கரையில் சொகுசு வீடுகள், அரசியல் தலைவர்கள், விஐபிகளுடன் விருந்துகள், கூட்டங்கள் என அனைத்திலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அரசுக்கு முன்கூட்டியே ரூ.26 கோடி வரி செலுத்தி தான் கவனிக்கத்தக்க நபராக ஹர்ஷத் மேதா காட்டிக்கொண்டார்.
ஆனால், ஒரு கட்டத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் இயல்பானது அல்ல, அது செயற்கையானது எனத் தெரியத்தொடங்கி மத்திய அரசின் விசாரணை முகமைக்கு எட்டியது. விசாரணை நடத்தப்பட்டதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு போலியான வங்கி ஆவணங்கள் கொடுத்து பங்குகளில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஹர்ஷத் மேத்தா கைது செய்யப்பட்டார். அதன்பின் வெளியே வந்த ஹர்ஷத் மேத்தா அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் மீதே லஞ்சப்புகார் கூறி நாட்டையே உலுக்கினார். ஆனால், இவர் மீதான வழக்கில், நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது. ஆனால், தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன்பாக, கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி ஹர்ஷத் மேத்தா உயிரிழந்தார்.
ராமலிங்க ராஜு
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமானத் திகழ்ந்த சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி. ராமலிங்க ராஜுவின் செயலால் இன்று நிறுவனமே காணாமல் போய்விட்டது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் பிறந்த ராமலிங்க ராஜு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கடின உழைப்பால் படித்து, அமெரிக்காவின் ஒஹியோ பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றார். அதன்பின் தன்னுடைய உழைப்பால் கடந்த 1987ம் ஆண்டு 20 ஊழியர்களைக் கொண்டு தொடங்கிய சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனம், அடுத்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக மாறியது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சத்யம் நிறுவனத்துக்கு நல்ல மதிப்பும் இருந்தது. ஆந்திர மாநில அரசிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் நெருக்கமாக வலம் வந்தவர்.
அமைதியான சுபாவம், கடின உழைப்பாளி என பெயர் எடுத்த, பி ராமலிங்க ராஜு நிறுவனத்தின் ஆவணங்களில் மோசடி செய்து, ரூ.7 ஆயிரம் கோடி ஏமாற்றியதாக புகாரில் சிக்கினார். பன்னாட்டு நிறுவனங்களுடன் தனது தொடர்பை அதிகமாக வளர்த்து இருந்த ராமலிங்க ராஜு, இன்றுள்ள நிரவ் மோடி போல் அரசின் பொருளாதார மாநாடுகளில் தவிர்க்க முடியாத விஐபியாக கலந்து கொண்டவர்.
ஆனால். நிறுவனத்தின் ஆவணங்களில் மோசடி செய்து, கணக்குகளில் லாபம் இருப்பதாகக் காட்டி ஏமாற்றினார். இதையடுத்து, பங்குச்சந்தையில் இருந்து இவரின் நிறுவனம் நிறுத்தப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜு அவரின் சகோதரர்களுக்கு 7 ஆண்டுகள் சிறையும், ரூ. 5.5 கோடி அபராதமும் விதித்து 2015ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ஆந்திர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனைவிதிக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஜாமீனில் ராமலிங்க ராஜு வெளியே வந்தார்.
விஜய் மல்லையா
சொகுசு வாழ்க்கை, மது, மாது, சூது என அனைத்துக்கும் சொந்தக்காரர் என்றால் அது விஜய் மல்லையாதான். தொழிலதிபராக வலம் வந்த விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்துக்காக வங்கிகளில் ரூ.9,500 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பண்டவல் நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த விஜய் மல்லையாவுக்கு வழிகாட்டியாக இருந்து, அவரின் தந்தை தொழில் துறையிலும், வர்த்தகத்திலும் ஈடுபடுத்தினார். கொல்கத்தா புகழ் சேவியர்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு, கலிபோர்னியா பல்கலையில் முதுகலை, முனைவர் பட்டத்தை விஜய் மல்லையா பெற்றார்.
இவரின் சொகுசு வாழ்க்கையும், ஆடம்பரமான விருந்துகள், விடுதிகள், பங்களாக்கள், பார்முலா ஒன் கார் டீம், ஐபிஎல் கிரிக்கெட் அணி, தனிசொகுசு படகு, தனி விமானம் என விஜய் மல்லையா சொகுசு வாழ்க்கியின் உறைவிடமாக திகழ்ந்தார்.
கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கப்பட்ட ரூ.9,500 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், நாட்டை விட்டு தப்பி ஓடினார். சிபிஐ நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்தும், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் இன்னும் இவரை மத்திய அரசால் கைது செய்ய முடியாத நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்.
இவரை இந்தியாவுக்கு அழைத்து வர இங்கிலாந்து அரசிடம் உதவியைநாடிய மத்தியஅரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், இவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதன் காரணமாக வழக்கமாக இவரின் செலவுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்ட உதவித்தொகையை சமீபத்தில் ரூ.16 லட்சமாக உயர்த்தி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கரீம் தெல்கி
நாட்டையே உலுக்கிய ரூ20 ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடியில் கைதானவர் அப்துல் கரீம் தெல்கி. ரயில்வே ஊழியரின் மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கரீம் தெல்கி. ரயிலில் காய்கறிகள், பழங்கள் விற்றும் பிழைப்பை நடத்தினர். கடந்த 1994ம் ஆண்டு, முத்திரைத்தாள் விற்க உரிமம் பெற்று மும்பையில் அலுவலகம் தொடங்கினார். ஆனால், 2001ம் ஆண்டு நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் முத்திரைத்தாளை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தீவிரமாக விசாரணை செய்த கர்நாடக போலீஸார், இந்த நவீன மோசடிக்கு பின்னால் அப்துல் கரீம் தெல்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். 2001ம் ஆண்டு, ராஜஸ்தானில் அஜ்மீரில் தெல்கி கைது செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு, நீதிமன்றம் தெல்கிக்கு 30ஆண்டுகள் சிறையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்தது. ஆனால், உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் தெல்கி உயிரிழந்தார்.
இதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிக்கு விதைபோட்ட லலித் மோடியும் ஊழல் புகாரில் சிக்கியே லண்டனில் வாழ்ந்து வருகிறார்.