குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நெதர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு துருக்கி அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மானியர்கள் கொல்லப்பட்டு இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக நெதர்லாந்து அங்கீகரிக்க உள்ளமைக்கு இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான சட்டமொன்று விரைவில் நெதர்லாந்து பாராளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உத்தேச சட்டம் தொடர்பில் நெதர்லாந்து பாராளுமன்றில் எதிர்வரும் வாரங்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த சட்டமானது நெதர்லாந்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிசல் அடையச் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில், நெதர்லாந்து ராஜதந்திரியை துருக்கி வெளிவிவகார அமைச்சு அழைத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை அரசியலாக்க முயற்சிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி நெதர்லாந்தில் இனச்சுத்திகரிப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.