இந்தியாவின் கர்நாடகாவில் பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் 2018-19-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையில், “கர்நாடகாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2017-18-ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் 1-ம் வகுப்பு முதல் இளங்கலை படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த திட்டம், அரசு உதவிபெறும் பாடசாலைகள், கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
மேலும் பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் 95 கோடி ரூபா செலவில் முதுகலை பட்டப்படிப்பு வரை அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3.75 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். மொத்தமாக பெண்களின் கல்வி மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக 4514 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு கர்நாடகாவில் உள்ள மகளிர் அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், “கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் பெண்களின் கல்வி நிலை உயரும். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய, இந்த திட்டம் பெரிதும் உதவும். பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கியதற்காக முதல்வர் சித்தராமையா வரலாற்றில் போற்றப்படுவார்” என பாராட்டு தெரிவித்துள்ளனர்