குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீள் பிரவேசம் தொடர்பில் ராஜதந்திர சமூகம் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு திரும்பக்கூடிய சாத்தியம் உண்டு என எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்து உலகின் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த விடயம் குறித்து மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்கள் குறித்து, மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தரப்புக்கள் மீளவும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி பீடம் ஏறுவதனை விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மீளவும் மோசமடையக் கூடும் என குறித்த நாடுகள் அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.