உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை நாட்டை ஸ்திரமற்ற நிலைமையில் இருந்து பாதுகாக்க தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பயணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியமைக்கு அமைவாக தொடர்ந்து தேசிய அரசாங்கத்துடன் பயணிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கோரி சுதந்திரக் கட்சியினரான தாம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் எனவும் இந்தநிலையிலேயே அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய அரசாங்கமொன்று இருப்பதனால் இதற்கு தீர்ப்பு வழங்குவது கடினமாகும் எனவும் உயர் நீதிமன்றத்தினை நாடி இது தொடர்பில் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமாஅதிபர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்படி நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாகவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பெறவுள்ளதாகவும் அறிவித்த தாம் நேற்று ஜனாதிபதியை மீண்டும் சந்தித்து போது 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்பட வேண்டியுள்ளது எனவும் எனவே உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்குமாறு கோரினார் எனவும் இதன்படி தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.