மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடுமுழுவதும் இளைஞர்களை கவர்ந்தார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிமிக்கி கம்மல் பாடல், ஷெரிலை உச்சத்துக்கு கொண்டு சென்றது போல் ‘ஒரு அடார் லவ்’ பாடல் பிரியா வாரியரை அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசவைத்துவிட்டது. பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முகம்மது நபி மற்றும் அவரது மனைவியார் தொடர்பான உணர்வுகளை காயப்படுத்துவதாக தன்மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்வதை தடுக்க வேண்டும் என கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் பயின்று வரும் பிரியா வாரியர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த பாடலின் மூலம் மிகப்பழமையான கேரள நாட்டுப்புற பாடலில் இருந்து வந்ததாகும். தற்போது ‘ஒரு அடார் லவ்’ படத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பாடல் 1978-ம் ஆண்டில் பி.எக்.ஏ ஜப்பார் என்பவர் இயற்றி தலச்சேரி ரபீக் என்பவர் முதன்முறையாக பாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக மிகப்பிரபலமாக புழக்கத்தில் உள்ள பலரது மனதைக்கவர்ந்த இந்த பாடலால் முஸ்லிம் சமுதாயத்தினரின் மத உணர்வுகள் காயப்படுவதாக தற்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் சுமார் 1 கோடி முஸ்லிம் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த பாடல் திடீரென்று மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்த பாடலின் வரிகளை சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் எனது கட்சிக்காரரான பிரியா வாரியர் மீது காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த செயல் எனது கட்சிக்காரரின் வாழ்வுரிமை, சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு படத்தில் நடித்ததற்காக இளம் கல்லூரி மாணவியான எனது கட்சிக்காரர் மீது இந்த பாடல் தொடர்பாக காவல் நிலையங்களில் கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப்படுவதை இந்த நீதிமன்றம் தடுக்க வேண்டும். சில மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பிரியா வாரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.