காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி யில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டதுடன் 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவை அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க திமுக சார்பில் பெப்ரவரி 23-ம் திகதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில பெப்ரவரி 22-ம் திகதி p அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து அரசு சார்பிலேயே அனைத்துக் கட்சிக்கூட்டம் நடப்பதால் திமுக சார்பில் நடக்க இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தநிலையிலேயே சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கூட்டத்தில், திமுக செயல்தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது