யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யாழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள போதும் வேறு அரசாங்க வைத்தியசாலைகள் குறைவாகக் காணப்படுவதால் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தினமும் யாழ் போதனா வைத்தியசாலையை நோக்கிச் செல்லவேண்டியுள்ளது.
பாரிய நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்களைப் போதனா வைத்தியசாலை கவனித்துக்கொள்ள ஏனையவர்கள் சிறிய வைத்தியசாலைகளுக்கு செல்வதன் மூலம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிகள் குறைக்கப்படுகின்றன என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் குருநகர் பிரதேச வைத்தியசாலை கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குருநகர் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வைத்திய நிலையம் வெளிநோயாளர் பிரிவு, பற்சிகிச்சை நிலையம், மகப்பேற்று விடுதி, மருந்தகம், நிர்வாகப்பிரிவு, களஞ்சியப்பிரிவு என பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களை கவனிப்பதற்காக இரண்டு நிரந்தர வைத்தியர்கள் உட்பட 15ற்கு மேற்பட்ட அனைத்துத்தர உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு ஆரோக்கியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ நிலையம் உங்களுக்கு சேவை செய்வதற்காக உங்கள் பணத்தில் இருந்து அமைக்கப்பட்ட ஒரு நிலையம் என்பதை மனத்தில் இருத்தி இதனை ஒழுங்காகவும், துப்பரவானதாகவும் வைத்திருக்க அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் பங்களிப்பை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1945 ம் ஆண்டளவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலை வடமாகாணத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் சுமார் 27 மில்லியன் ரூபா செலவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.