வடமாகாண மாணவ மாணவியரின் அரும்பெருஞ் சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டுவருகின்ற கல்வியானது இடையில் சில காலம் பல்வேறு காரணிகளால் குழப்பமுற்று மழுங்கிய நிலையில் காணப்பட்ட போதும் தற்போது மாணவ மாணவியர் காட்டுகின்ற ஆர்வமும் ஊக்கமும் எம்மை மகிழ்வில் ஆழ்த்துகின்றன. வருடா வருடம் எம் மாணவ மாணவியர் பொதுப் பரீட்சைகள் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் பெறுகின்ற பெறுபேறுகள் தென்பகுதி தலைமைகளைக் கூட திரும்பிப் பார்க்க வைக்கின்றது.
இந்த நிலையில் இம் மாணவ மாணவியரின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மேலும் மெருகூட்டப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டு மாணவ மாணவியர் விருப்புடன் தமது பாடநெறிகளைக் கற்கக் கூடிய வகையில் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
21ம் நூற்றாண்டில் மாணவ மாணவியரை நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் வடமாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஒரு அம்சமாக அல்லது – கற்றல் ஊடாக கற்றல், கற்பித்தல், நடவடிக்கைகளை அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டம் வைபவ ரீதியாக இன்று ஆரம்பித்து வைக்கப்படும் நிகழ்வில் பிரதம அததியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாய்மொழி மூலக் கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே மாணவ மாணவியர் தமது பாடங்களைச் சொந்த மொழியான தமிழ்மொழி மூலம் கற்கின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். அதே நேரம் ஆங்கில மொழிக் கல்வி படிப்படியாக கைவிடப்பட்டு ஆங்கில மொழி அறிவு குன்றிய மாணவ சமூகம் உருவாக்கப்பட்டது.
இது ஒரு துரதிர்ஸ்டவசமான செயலாகும். இன்று பல தமிழ் அறிஞர்களும் கல்வியலாளர்களும் எம்மைத் தினமுஞ் சந்திக்க வருகின்றார்கள். அவர்கள் ஆங்கிலமொழிப் பாவனையில் படுகின்ற சிரமங்களை நோக்கும் போது எனக்கு வேதனை அளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவோ திறமை படைத்த துறைசார் விற்பன்னர்கள் அவர்களின் ஆங்கிலமொழி அறிவு பற்றாக்குறையினால் பல இடங்களில் தமது திறமைகளை 100 சத விகிதம் வெளிக்கொணர முடியாமல் அல்லற்படுவதை அவதானித்திருக்கின்றோம்.
ஆங்கிலத் தேர்ச்சியின்மையினாலும் தமிழில் சட்ட நூல்கள் அக் காலத்தில் இல்லாமையினாலும் பெரும் பாலும் என்னுடைய தமிழ்மொழி விரிவுரைகளையே மாணவ மாணவியர் தமது பரீட்சையின் போது பாவித்தனர். அவற்றிற்கு அப்பால் செல்ல முடியாதவர்களாக அவர்களுள் பலர் இருந்தார்கள். காரணம் போதிய ஆங்கில அறிவின்மை. உசா நூல்கள் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தன.
1987ல் நான் சீனாவின் பீஜிங் மாநகரத்துக்குச் சென்ற போது சீனப் பேராசிரியர்கள் மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார்கள். ஆங்கிலம் வேற்றார் மொழி என்று அதைப் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தை உலக மொழிகளில் ஒன்றாகவே கண்டு அதில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். எம் தலைவர்களின் குறுகிய நோக்கு மாணவர்களையே வெகுவாகப் பாதித்தது.
ஆகவே கல்வி கற்கும் காலத்தில் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளுடன் சேர்த்து ஆங்கில மொழிக் கல்வியையும் விருத்தி செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். தற்கால மாணவ மாணவியர்களின் ஏன் குழந்தைகளின் பொழுது போக்குக் காலங்கள் இலத்திரனியல் சாதனங்களுடனேயேதான் பெரும் பகுதி கழிக்கப்படுகின்றன. அவர்கள் ஏனைய மாணவ மாணவியருடன் சேர்ந்து விளையாடுதல் அல்லது பிற விடயங்களைப் பற்றி உரையாடுதல், இலக்கிய மற்றும் சமூக நாவல்களைக் கற்றல் ஆகிய அனைத்தைய..