கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சிறந்த ஆட்சி நிலவுகிறது என்றும் கேரள மாநில முதல்வர் பல முற்போக்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மாநிலமாக விளங்கியது கேரளா.
இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மது, போலீஸாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், மத்தாச்சன், மனு, அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உம்மர் ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மது கொலை சம்பவம் தொடர்பாக இன்று 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க திருச்சூர் சரக ஐ.ஜி. அஜித்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஐ.ஜி. அஜித்குமார் தலைமையிலான போலீஸார் அட்டப்பாடி சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். .
இந்நிலையில், வயிற்று பசிக்காக உணவுப் பண்டங்ளை திருடியவர்களை கொல்லப்படுகிறார்கள்; வசதியான ஆடம்பர வாழ்க்கைக்காக கோடிகணக்கில் கொள்ளையடிப்பவர்களை சர்வ சாதரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகிறார்களே அவர்களை கொல்லுவது யார்? என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைரலாகி வருகின்றன.
இச்சம்பவத்திற்கு மலையாளத் திரையுலக நடிகர் மம்மூடி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், கொல்லப்பட்ட மதுவை அதிவாசி என்று அழைக்காதீர்கள், அவர் என் இளைய சகோதரர். என்னை மன்னித்துவிடுங்கள் மது என உருக்கமான தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக பாலக்காடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இக் கொலை கும்பலைச் சேர்ந்த 2 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.