Home இலங்கை ரணில் ஒரு வலிய சீவன்? நிலாந்தன்…

ரணில் ஒரு வலிய சீவன்? நிலாந்தன்…

by admin


பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு. அப்படிக் காட்டுவோர் பாலசிங்கம் கூறிய ‘ரணில் ஒரு நரி’ என்ற வாசகத்தையை மேற்கோள் காட்டுவதுண்டு. 2005ல் ரணில் பதவிக்கு வருவததை புலிகள் தடுத்து நிறுத்திய பொழுதும் மேற்படி வாசகம் மேற்கோள் காட்டப்பட்டது. நோர்வே செய்த சமாதானத்தை ஒரு தர்மர் பொறி என்று வர்ணித்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த பலரும் அச் சமாதானத்தின் ஒரு தரப்பாகிய ரணிலை நம்பத்தாயராக இருக்கவில்லை. அப்படித்தான் 2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பொழுதும் ரணிலின் எழுச்சியை முன்வைத்து விமர்சித்த தமிழ்த்தரப்பில் உள்ள சிலர் அவர் முதலில் கொண்டு வந்த சமாதானம் புலிகளை உடைத்தது. இப்பொழுது கொண்டு வந்திருக்கும் புதிய மாற்றம் கூட்டமைப்பை உடைக்கப் போகிறது என்று ஆரூடம் கூறினர். இப்படியாக ரணில் ஒரு தந்திரமான ஆள் என்ற படிமம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் ஆழப்பதிந்து விட்டது. அவர் அரசியலில் குள்ளநரி என்று வர்ணிக்கப்பட்ட ஜெயவர்த்தனாவின் மருமகன் என்பதும் அவரை அப்படி பார்க்க ஒரு காரணம். ஆனால் ரணிலோடு பல்கலைக்கழகத்தில் கூடப் படித்த தமிழர்கள் அவரை மென்மையானவர் என்றும் நெகிழ்ச்சியானவர் என்றும் வர்ணிக்கிறார்கள். அந்நாட்களில் அவர் ஒரு மோசமான இனவாதி அல்லவென்றும் அவர்கள் கூறுவதுண்டு.

அதே சமயம் சிங்கள மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக கிராமப்புற சிங்கள மக்கள் மற்றும் கடுப்போக்குவாதிகளைப் பொறுத்தவரை ரணில் ஒரு தண்டுசமத்தான மிடுக்கான தலைவர் அல்ல. மீசையில்லாத மேற்கத்தைய மயப்பட்ட முகம் தோற்றம், நடை, உடை பாவனைவாழ்க்கை முறை என்பவற்றைக் கொண்ட ரணிலை அவர்கள் சிங்கள – பௌத்த தேசியவாதத்திற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவராக கருதவில்லை. நகர்ப்புற படித்த நடுத்தரவர்க்கச் சிங்கள மக்கள் மத்தியில் ரணிலுக்கு அதிகளவு ஆதரவாளர்கள் உண்டு. ஆனால் விருந்துபசாரங்களில் கைகளில் மதுக்கிண்ணத்தை ஏந்தியபடி கோட்டும், சூட்டுமாக முதுகைக் கோணி நடனமாடும் ஒருவரை சிங்களக் கடும்போக்கு வாதிகள் அதிகம் நம்பிக்கையோடு பார்க்கவில்லை. குறிப்பாக யுத்த வெற்றி நாயகனாக காட்சியளிக்கும் மகிந்தவோடு ஒப்பிடுகையில் சிங்கள – பௌத்த கடுந்தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கும் தகுதி ரணிலுக்கோ, மைத்திரிக்கோ இல்லையென்று சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகள் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கைகளைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. ரணிலின் தலைமையின் கீழ் அவரது கட்சிக்குக் கிடைத்த முப்பதாவது தோல்வி இதுவென்று கூறப்படுகிறது. முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் மகிந்த பெற்ற வாக்குகளின் அளவு இம்முறை குறைவுதான் என்றாலும் ஒட்டுமொத்த விளைவைக் கருதிக் கூறின் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு தடவை ரணிலின் தலைமைத்துவத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. தேர்தல் முடிவுகளின்படி பெரும்பாலான கிராமப்புறங்கள் மகிந்தவின் கைக்குள் சென்றுவிட்டன. அதே சமயம் நாடாளுமன்றம் தொடர்ந்தும் ரணிலின் கைக்குள்தான் இருக்கிறது. அதே சமயம் மைத்திரி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகக் காணப்படுகிறார். அவர் தனது கட்சிக்கும், கூட்டரசாங்கத்திற்குமிடையே கிழிபடும் ஒருவராகக் காணப்படுகிறார். இது ஏறக்குறைய சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் ரணில் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியபொழுது காணப்பட்ட ‘இரட்டை ஆட்சியை’ ஒத்த ஒரு நிலமைதானா? என்ற கேள்வி எழுகிறது.

இப்படி ஒரு நிலமை வரலாம் என்பதனை ரணில் ஏற்கெனவே முன்னுணர்ந்திருந்தார். இது விடயத்தில் அவர் தன் மாமனார் ஜெயவர்த்தனாவைப் போலவே தன்னுடைய நோக்கு நிலையிலிருந்து முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையோடு மேற்கொண்டிருந்தார். தான் இம்முறையும் நிச்சயமின்மைகளின் மத்தியில்தான் ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டியிருக்கும் என்பதனை ரணில் நன்கு முன்னுணர்ந்திருந்தார். இனப்பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டுமென்று மேற்கு வற்புறுத்தும் என்பது அவருக்குத் தெரியும். அவ்வாறு ஒரு தீர்வை கொண்டுவர முற்பட்டால் அது கடும்போக்குச் சிங்கள பௌத்தர்களைத்தனக்கெதிராகத் திருப்பும் என்பதும் அவருக்குத் தெரியும். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுபிடிப்பது தனது தலையைப் பதம் பார்க்கக்கூடும் என்பதனை அவர் சந்திரிகாவின் காலத்தில் அனுபவித்தவர். எனவே அப்படியொரு நிலமை இம்முறையும் வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையோடு அவர் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரத்தை அது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்துகிறது. அதன்படி ஒரு நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு நாலரை ஆண்டுகளின் பின்னரே அதற்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். இரட்டைப் பிரஜா உரிமையைப் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஏற்பாடும் மேற்படி பத்தொன்பதாவது திருத்தத்திலேயே உண்டு. மகிந்தவின் சகோதரர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதே ரணிலின் நோக்கம். இப்பொழுது ரணிலை பிரதானமாக பாதுகாப்பது இந்த ஏற்பாடுதான். இரண்டாவதாக அவரைப்பாதுகாப்பது நாடாளுமன்றத்தில் யு.என்.பி.க்கிருக்கும் 106 ஆசனங்கள்

மூன்றாவது- அவருக்கும் – மைத்திரிக்கும் இடையிலான பிரிந்து போக முடியாத தங்கு நிலை உறவாகும். 29 தடவைகள் தோல்வியுற்ற ரணிலுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது மைத்திரியுடனான சேர்க்கைதான். மகிந்தவால் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட மைத்திரிக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் புகழையும் ராஜபோகத்தையும் பெற்றுக் கொடுத்தது ரணிலுடனான சேர்க்கைதான். எஸ்.எல்.எப்.பி.யை பிளவுண்ட நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு ரணிலும் மைத்திரியும் சேர்ந்திருக்க வேண்டும் .இந்த இரண்டு பேர்களுக்குமிடையிலான தங்கு நிலை உறவைப் பாதுகாப்பதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தயாராகக் காணப்படுகின்றன.அது இப்பொழுது மைதிரிக்குத் தேவைப்படா விட்டாலும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தேவை. ரணில் – மைத்திரி கூட்டு எனப்படுவது ஓர் உள்நாட்டுத் தேவை மட்டுமல்ல. அதற்கொரு அனைத்துலகத் தேவையும் பிராந்தியத் தேவையுமுண்டு. இந்தக்கூட்டு மேற்கினுடையதும், இந்தியாவினுடையதும் செல்லக் குழந்தையாகும். இக்குழந்தையை கத்தியின்றி ரத்தமின்றி மேற்படி நாடுகள் பெற்றெடுத்தன. இக்குழந்தை பிறந்ததிலிருந்து இச் சிறிய தீவில் மேற்கிற்கும், இந்தியாவிற்கும் ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு வலுச்சமநிலை உருவாக்கப்பட்டது. எனவே அக்குழந்தையை சாகவிட மேற்படி நாடுகள் தயாரில்லை. இக்குழந்தையானது இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு கண்டங்களைக் கடந்திருக்கிறது. முதலாவது பிணைமுறி விவகாரம்.இரண்டாவது உள்ளூராட்சிசபைத் தேர்தல். தேர்தல் முடிவுகளை வைத்துச் சொன்னால் எதிர்காலத்தில் இக்குழந்தைக்கு மேலும் பல கண்டங்கள் உண்டு.

அதே சமயம் இக்குழந்தையை மேற்கு நாடுகள் மட்டும்தான் பாதுகாக்கின்றன என்பதல்ல. இதைப் பாதுகாக்க வேண்டிய ஒரு தேவை மகிந்தவிற்கும் உண்டு என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இலங்கை அரசை போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாத்தது இக்குழந்தைதான். இக்குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட நற்பலன்களே இலங்கை அரசை அனைத்துலகத்தால் தனிமைப்படுத்தப்படும் ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றின. அதை ஒரு சாதனையாக மைத்திரி அடிக்கடி கூறி வருகிறார். ராஜபக்ஸக்களை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது இந்த அரசாங்கமே என்று அவர் கூறுவதுண்டு. இப்படிப்பார்த்தால் இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் வேலையை ரணில் – மைத்திரி கூட்டே செய்து வருகிறது. எனவே அனைத்துலக அளவில் தனக்கேற்பட்ட அபகீர்த்தியையும், சட்டச் சிக்கல்களையும் மேவிக் கடப்பதற்கு ராஜபக்ஸவிற்கு ரணில் தேவை என்று மு.திருநாவுக்கரசு கூறுகிறார்.

ஆனால் இதற்கு முன்னரும் மகிந்த ரணிலைப் பாதுகாத்திருக்கிறார். ரணிலுக்கு எதிராக அவருடைய சொந்தக்கட்சிக்குள் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சிகளைப்பற்றி புலனாய்வு அறிக்கைகள் மூலம் அறிந்து ரணிலை மகிந்த எச்சரித்த தருணங்களும் உண்டு. ரணிலைப் போன்ற தொடர்ந்து தோல்வியைத் தழுவும் ஒருவரை யு.என்.பியின் தலைவராக வைத்திருப்பதற்கு மகிந்த விரும்பக்கூடும். ஏனெனில் ரணில் தலைமை தாங்கும் வரையிலும் யு.என.பியானது எஸ்.எல்.எவ்.பியிற்கு ஒரு பெரிய சவாலாக எழ முடியாது என்று மகிந்த நம்பக்கூடும். எனவே ரணிலைப் போன்ற ஒருவரை தொடர்ந்தும் யு.என்.பிக்குத் தலைவராக வைத்திருக்க மகிந்த விரும்புவார். இப்படி ஆபத்தான தருணங்களில் ரணிலை மகிந்த பாதுகாத்த காரணத்தால் இருவருக்குமிடையே தங்குநிலை நட்பொன்று நிலவுவதாக எடுத்துக் கொள்ளலாம். இது காரணமாகவே ஆட்சி மாற்றத்திற்கான கூட்டு உருவாக்கப்பட்டபொழுது சில சமயம் அது பிழைத்தால் சந்திரிக்காவும், மைத்திரியும்தான் அதிகம் ஆபத்துக்குள்ளாவார்கள் என்றும் கூறப்பட்டது. ரணில் அவர்களளவிற்கு பயப்படத் தேவையில்லையென்றும் கூறப்பட்டது.
இம்முறை தேர்தல் பிரச்சாரக் களத்திலும் ரணில் மகிந்தவை தனிப்பட்ட முறையில் தாக்கியது குறைவு என்று கூறப்படுகிறது. அது போலவே தன்னைப் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்தும் அனைத்துலக அளவில் அபகீர்த்திக்குள்ளாவதிலிருந்தும் ரணில்தான் காப்பாற்றினார் என்று மகிந்த நம்புவதாகவும் தெரிகிறது. கூட இருந்து தன்னைக் கவிழ்த்த மைத்திரியை அவர் எதிரியாகப் பார்க்கும் அளவிற்கு ரணிலைப் பார்க்கவில்லையென்றும் தெரிகிறது. கட்சிக்குள் தன்னால் பின்தள்ளப்பட்ட சந்திரிக்காவை விடவும் அவர் ரணிலைக் குறைந்தளவே வெறுக்கிறார்.

அது மட்டுமல்ல ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மகிந்த பதவியைக் கைவிட மாட்டார் என்றவாறாக ஊகங்கள் எழுந்தன. ஆனால் அப்பொழுது ரணில் மகிந்தவைத் தேடிச்சென்று சந்தித்தார். அச்சந்திப்பின் பின்னர் ஆட்சி மாற்றம் சுமுகமாக நிகழ்ந்தது. இப்படிப் பார்த்தால் அச்சந்திப்பிற்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் உண்டு.

எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் ரணில் மேற்கு நாடுகளிற்கும் மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு தலைவர். அதே சமயம் சிங்கள – பௌத்த கடும்போக்கு வாதத்தின் தலைவராகக் காணப்படும் மகிந்தவிற்கும் நண்பர். அதே சமயம் மகிந்தவிற்கு எதிரான மைத்திரிக்கும், சந்திரிக்காவிற்கும் அவர் நண்பர். அதை விட அரசாங்கத்திற்கு வெளியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கும் சம்பந்தரும் அவருக்கு நண்பர். வடமராட்சி கிழக்கிற்கு அவரை அழைத்துச் சென்று நுங்கு வெட்டிக் கொடுக்கும் சுமந்திரனும் அவருக்கு நண்பர். இப்படிப் பார்த்தால் ரணில் யாருக்கு எதிரி?

இதுதான் ரணிலின் பலம். இத்தகைய அர்த்தத்தில் கூறின் அவர் மாமனார் ஜெயவர்த்தனாவின் அசலான வாரிசு எனலாம். மகிந்தவைப் போல மீசையும், மிடுக்குமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் ஒரு தலைவர் அவரல்ல. ஆனால் எல்லாத் தோல்விகளுக்குப் பின்னரும் தனது கட்சிக்குள் தனக்கெதிராக தலையெடுத்த எல்லாச் சதி முயற்சிகளுக்குப் பின்னரும் உயிர் பிழைத்திருக்க வல்ல ஒரு வலிய சீவன் அவர். இப் பிராந்தியத்திலேயே முப்பது தடவைகள் தோற்ற பின்னும் எதுவிதத்திலோ தன்னை தக்க வைத்துக் கொள்ள அவரால் முடிகிறது. உள்நட்டில் அவர் நிச்சயமின்மைகளின் மத்தியில் நிம்மதியிழந்து தவிப்பவராக இருக்கலாம். ஆனால் அனைத்துலக அளவிலும், பிராந்திய அளவிலும் அவருக்கு கவர்ச்சி மிக அதிகம். உள்நாட்டில் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் அதே சமயம் அனைத்துலக அரங்கில் மிகப் பலமாகக் காணப்படுகின்ற தலைவர் அவர். வெட்ட வெட்டத் தழைக்கும் ஒரு நூதனமான அரசியல் செடி அவர்.ஆனால் அந்தச் செடி தமிழ் மக்களுக்கு நற்கனிகளைத் தந்ததில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More