கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக 21 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.
பாலியல் சேவைகளுக்காக பணம் வழங்கிய ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை சிலர் தாங்களாகவே பதவி விலகியுள்ளதாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குநர் டக்கார்ட் தெரிவித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையினைத் தொடர்ந்து, ஜெனிவாவை சார்ந்த செஞ்சிலுவை சங்கம் தங்கள் அமைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது , 2015ஆம் ஆண்டில் இருந்து பாலியல் சேவைகளுக்கு பணம் வழங்கிய 21 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அலடலது பதவிவிலகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு இது போன்ற நடத்தைகள் துரோகம் விளைப்பதுபோல் உள்ளதாக குறிப்பிட்ட டக்கார்ட், மனித கௌரவத்திற்கு எதிராக இது இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் மீது எதிர்காலத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.