சிவகுரு பிறேமானந்தன்….. (முகநூல் பதிவு)
விக்கிரமாதித்தன் கதை படித்திருப்பீர்கள் அதில் வேதாளம் ஒரு கதையை சொல்லி அவனிடம் பதில்கேட்கும். அதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்ற ஒரு சாபம்வேறு உள்ளது. இப்போது வேதாளம் போலவே (ஊடக வேதாளம்?) உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்லப்போகிறேன். அவற்றின் இறுதியில் பதில் சொல்லவேண்டியது உங்களின் பொறுப்பு.
முதலாவது கதை
பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோஇலங்கை திரும்பிவிட்டார். அதாவது திருப்பியழைக்கப்பட்டார். இந்த அதிகாரியை 2 வாரகாலத்துக்குள் இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு கொழும்புக்கு லண்டன் அழுத்தம் வழங்கியமை இப்போது உறுதிப்படுத்தப்பட்டது.
பிரித்தானியாவை பொறுத்தவரை அறவழியில் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த மக்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவதான பாணியில் இந்த அதிகாரி காட்டிய சைகை சகித்துக்கொள்ளமுடியாதது. இந்த விடயத்தில் தமிழர்கள் கொண்ட விசனத்தை பிரித்தானிய அமைச்சரவை முகங்களும் நாடாளுமன்ற முகங்களும் பிரதிபலித்தன.மேற்படி ராணுவஅதிகாரி பிரித்தானியாவில் இருந்து மீள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து ராஜதந்திர மொழியாடலில், லத்தீனில் பயன்படுத்தப்படும்; persona non grata ( பெர்சனோ நொன் கிறாத்தா) எனப்படும் நிலையின் கட்டத்துக்கு உத்தியோகப்பற்ற ரீதியில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ வந்துவிட்டார். பெர்சனோ நொன் கிறாத்தா ஆனது வெளிநாடு ஒன்றின் ராஜதந்திர வலையமைப்பில் பணியாற்றும் ஒருவரை அவது பணிஜயுரியும் நாடு தொடர்ந்து நாட்டுக்குள் தங்கவைக்க விரும்பாத தன்மையென்பது நீங்கள் தெரிந்திருக்ககூடியவிடயம் இதன்பின்னர் கடந்தவெள்ளியன்று அவர் சிறிலங்கா திரும்பினார் ஆயினும் அவரது நாடுதிரும்பல் நகர்வுக்கு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதைக்கு ஒப்பான வகையில் சிறிலங்கா ராணுவத்தரப்பும் விளக்கங்களை வழங்கிவருவது வேறுவிடயம்.
எந்ததரப்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த நகர்வு மேற்கொள்ளப்படவில்லையென்றார் முதலில் இராணுப்பேச்சாளர். அதன்பின்னர் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்காவும் ஒரு விளக்கமளித்தார். பிரியங்கபெர்ணான்டோவின் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவர் திருப்பியழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆக மொத்தம் அழுத்தங்கள் ஊடாக பிரியங்கபெர்ணான்டோ இலங்கைக்கு அனுப்பபட்டுவிட்டார். முதலாவது கதை முடிந்தது.
இனி இரண்டாவது கதைவருகிறது.
அதன் முடிவில் வரும் வினாவுக்கு பதிலளிக்கவேண்டியது தமிழர்களான உங்களின் பொறுப்பு
கடந்த 22 ஆந்திகதி SFHQ-J எனப்படும் பலாலியில் உள்ள வடக்கு ராணுவத்தலைமையகத்தில் ஒரு ஆட்சேர்ப்பு நகர்வு இடம்பெற்றது. வேலைவாய்ப்புகள் வழங்கப்படாத எங்கள் பிள்ளைகளில் 50 பேர்; இராணுவ தன்னார்வ படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு யாரும் வித்தியாசமான முத்திரைகளை குத்திவிடாதீர்கள். அவர்கள் எப்போதும் எங்களின் பிள்ளைகளே. இந்த 50 பேரில் முன்னாள் போராளிகள் 11 பேரும் அடங்குகின்றனர். இவர்களுக்கு மாதாந்த ஊதியம் நாற்பதினாயிரம். நாற்பதினாயிரம்பெறும் வேலையென்றாலும் அவர்களின் முகங்களில் சோகம் அப்பிக்கிடக்கிறது இதனைவிட 55 வயதுக்குப்பின்னர் ஓய்வூதியம் உட்பட இராணுவத்தினருக்குரிய அனைத்து சலுகைகளும் (பெற்றோருக்குரிய மருத்துவ உதவிகள் உட்பட) கிடைக்குமெனவும் ராணுவம் குறிப்பிடுகிறது.
ஆனால் இவர்களுக்கு சிறிலங்கா ராணுவ சீருடைகள் வழங்கப்படமாட்டாது. ஏனெனில் இவர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா.? அமெரிக்காவின் 33 ஆம் அரச தலைவர் ஹரி எஸ். ட்ரூமன் (; (Harry S. Truman) கூட ஒரு ஜப்பானியர்களை அவர்கள் எங்களிலும் பார்க்க வித்தியாசமானர்கள் என்றார்.( They looked different from us) அதன் பின்னர் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
பலாலியில் ராணுவ சீருடைகளில் இல்லாமல் எங்கள் 50 பிள்ளைகளுக்கும் என்னவேலை? வேலை நிச்சயமாவே இருக்கிறது. உங்களுக்குத்தெரியுமா? பலாலி படைவளாகத்தில் இராணுவம் பாரியளவில் தெங்கு செய்கையை முன்னெடுத்துவருகிறது. ஒருலட்சம் தென்னைமரங்களை நடப்பட்டும் திட்டம இது. ஏற்கனவே எண்ணாயிரம் தென்னைமரங்கள் நடப்பட்டுவிட்டன. இவ்வாறு நடப்பட்ட தென்னை மரங்களை பாரமரப்பதே இந்த சீருடையற்ற கூலிகளான எம்மவர்களின் பணி.
மறந்துவிடாதீர்கள். சிறிலங்கா ராணுவம் இவர்களை பலவந்தமாக பிடிக்கவில்லை. வறுமைநிலையை ஒழிக்க ,வேலைவாய்ப்புகளை வழங்கத்திராணியற்ற நாமே அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டோம்.
அடடே எங்களிடம் மாகாணசபை உள்ளது. கட்டிடங்களுக்கு திறப்புவிழா நாடாக்களை வெட்டுவதற்கு நேரமும் உள்ளது. இதோ எதிர்வரும 6 ஆந்திகதி உள்ளுராட்சி சபைகளும் வரப்போகின்றன. ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு நாற்பதினாயிரம் ரூபா மாதாந்த ஊதியத்தில் கூலிவேலை.
இப்போது வேதாளம் கேள்வி கேட்கும் நேரம் .
கழுத்தறுப்பு சைகை காட்டிய பிரியங்கர என்ற அதிகாரியை சீற்றம் கொண்டு லண்டனில் இருந்து அனுப்ப முயன்றோம் சரி? ஏன் எங்களுக்கு பிரியமானவர்களை கூலிகளாக அனுப்பினோம்? பதில் கூறுங்கள். பயப்பிடாதீர்கள் பதில் கூறாவிட்டாலும் உங்கள் தலைகள் விக்கிரமாதித்தனின் சாபம் போல சுக்குநூறாக வெடித்துவிடாது.
நன்றி – Sivaguru Premananthan – FB