குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில்; சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஸ்ய விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுயாதீன அடிப்படையில் ரஸ்ய ஒலிம்பிக் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியானது சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதும் ரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்கள் இந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளனர். ஐஸ் ஹொக்கி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ரஸ்ய வீரர்கள் தங்கம் பதக்கம் வென்றனர்.
ஜெர்மனியை நான்குக்கு மூன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஸ்ய வீரர்கள் வெற்றியை பதிவு செய்திருந்தனர். பதக்கம் வழங்கும் நிகழ்வின் போது தடை விதிக்கப்பட்டிருந்த ரஸ்ய தேசிய கீதத்தை வீரர்கள் பாடியுள்ளனர். இந்த நடவடிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், நிபந்தனை மீறல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்ட காலமாக ரஸ்யா, ஊக்க மருந்து தொடர்பான விதிகளை உதாசீனம் செய்து வரும் காரணத்தினால் இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்யா ஓர் நாடாக பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரஸ்ய தேசிய கொடியை ஏந்திக் கொண்டு வீர வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ரஸ்யா விடுத்த கோரிக்கையை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்திருந்தமை குறிப்பித்தக்கது