மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனைய 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.
இதேபோன்று நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் முதன்மை வேட்பாளர் நெய்பியு ரியோ போட்டியின்றி அவரது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதனால் மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேகாலயாவில் முதல் முறையாக பெண்களுக்காக 67 வாக்குச்சாவடிகள் மற்றும் 61 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 32 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மாநில காவல்துறையினடன் மத்திய ஆயுதப்படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் திகதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதேவேளை நாகாலாந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும், ஒரு வாக்குச்சாவடியில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது