166
பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை
செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு
அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும்
பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்?
பேரலையே நீயா அவனின் படகை உடைத்தாய்?
குடிவரவு சட்டத்தை மீறி
அய்ரோப்பியாவுக்குள் நுழைய எத்தனித்தான் என்றனர்
ஆயுதங்களை பரிசளிப்பவர்கள்
குடியகழ்வு சட்டத்தை மீறிச் சென்று
துருக்கிக்கரையில் துயில்கிறான் என்றனர்
யுத்தத்தின் முதலாளிகள்
ஏனெனில் அவன் சிரியக் குழந்தை
எதுவும் பேசாமல் குப்புறக் கிடந்தான் அய்லான் குர்தி*
குண்டு தின்று வீசிய ஈழக் குழந்தையர் போல
சன்னங்கள் துளைத்த ஆப்பகானியக் குழந்தைபோல
பிய்த்தெறியப்பட்ட ஈராக்கியக் குழந்தைபோல
துரப்பட்ட மயன்மாரியக் குழந்தைபோல
பசியால் துவண்ட சோமாலியாக் குழந்தைபோல
இன்னுமின்னும் எத்தனை தேசங்களின்
இன்னுமின்னும் எதற்காகவெல்லாம்
இன்னுமின்னும் எத்தனை குழந்தைகள்
இன்னுமின்னும் எங்கெல்லாம் வீசப்படுவர்?
ஈழக் கடற்கரையில் அன்றெமது குழந்தைகள்
கொன்று வீசப்பட்டபோது
எழவில்லை ஒரு குரலும்
ஏனெனில் அவர்கள் ஈழக் குழந்தையர்
யுத்தத்திற்கான உலகில்
குழந்தைகளுக்குச் சவக்குழியானது கடல்.
¤
தீபச்செல்வன்
“அய்லான் குர்தி“ ஓர் சிறியக் குழந்தை. போர் காரணமாக தன் நாட்டைவிட்டு அகதியாக வெளியேறி அய்ரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டபோது துருக்கில் நடந்த படகு விபத்தில் கடலில் மூழ்கி இறந்தான். அவனின் உடல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது.
Spread the love