Home உலகம் சிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்…! – ஈழத்து நிலவன் –

சிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்…! – ஈழத்து நிலவன் –

by admin
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானையும், கிழக்கில் , வடக்கேதுருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும்சுன்னி முஸ்லிம்களாவர்,மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10%கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே, கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.
உலக போரின் தாக்கத்தால் சிரியா 1936இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. இருந்தும் 16 எப்ரல் 1946 ல் தான் முழுமையாக சுதந்திரம் பெற்றது.
1947 ‘ல் ஹிஸ்ப் அல் பாத் என்பவரால் பாத் கட்சி என்ற சோசியலிச கட்சி தொடங்க படுகிறது. பாத் என்றால் மறுமலர்ச்சி என்று பொருள். இந்த ஒற்றுமை, புரட்சி, சோசியலிசம் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. 1957’ல் நடந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது இந்த கட்சி. 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின.
1963 ‘ல் பாத் கட்சியினர் புதிய அரசை உருவாக்கினர்.
இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் 1967 ல் நடந்த யுத்தத்தில் சிரியா எகிப்துக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றியது. அதில் இஸ்ரேலின் பார்வை சிரியா மீது திரும்பி 48 மணி நேரத்தில் சிரியாவை வீழ்த்தியது இஸ்ரேல். இந்த தோல்வி அதிபர் ஜதீதுக்கும் இராணுவ தளபதி அஸ்ஸாதுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
அதன்பின் 1970ல் யாசர் அரஃபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், ஜோர்டானுக்கும் இடையே காஸா பகுதியால் ஏற்பட்ட பிரச்சனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இராணுவ தளபதியான ஹஃபீஸ் அஸ்ஸாத் படைகளை அனுப்பி இராணுவ உதவிகளையும் செய்தது ஜோர்னானின் மன்னர் ஹீசைன் தலைமையிலான படைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஹஃபீஸ் அஸ்ஸாத் பெரும் தலைவராக மாறினார் பின் தனக்கு இருந்த இராணுவ பலத்தை கொண்டு அதிபராக இருந்த ஜதீதிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் பின் நண்பரான ஜதீதையே கைது செய்து சிறையில் அடைத்தார்.
சிரியா 74 சதவீதம் சன்னி முஸ்லீம்கள் வாழும் நாடு. இந்த நாட்டில் பாத் கட்சியினரின் கொள்கை மற்றும் ஆட்சியதிகாரத்தை 1970களில் இருந்தே சிலர் எதிர்த்தே வந்துள்ளனர்.
சிரியா வரலாற்றில் அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்கள். உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, மெள்ள நரகமாக மாறி வருகிறது. பாதுகாக்க வேண்டிய அரசே பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது.அங்கே மனிதநேயம் முற்றிலும் மரணித்து போயிருக்கிறது. என்னதான் நடக்கிறது சிரியாவில்? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது? இவையெல்லாம் நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதன் வரலாற்றை அறிய வேண்டும்
மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள்.
அதில் ஒன்றுதான் இந்தச் சிரியா அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிரிவினை.சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.
ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், சிரியாவின் அரசினை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிடமுடியாது என்பதை புரிந்தகொண்டபின்னர், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்சு, துருக்கி, கத்தார் மற்றும் இன்னபிற முஜாகிதின் அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கின. அவர்களது ஆதரவுடன் செயல்படத்துவங்கிய “ஃபிரீ சிரியன் ஆர்மி” என்கிற தீவிரவாத அமைப்பு களத்தில் இறங்கியதும் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இயங்கிய அந்த அமைப்பாலும் சிரிய அரசை கவிழ்த்துவிடமுடியவில்லை. அதன்பின்னர் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற அமைப்பு சிரியாவின் உள்நாட்டுப்போரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. திடீரென இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். எங்கிருந்து வந்தனர் என்பதையெல்லாம் சர்வதேச நாடுகளோ ஊடகங்களோ எந்தக்கேள்வியும் பெரிதாக எழுப்பவில்லை. சவுதி அரேபியாவின் மரணதண்டனைக்கைதிகள் சில ஆயிரம் பேருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று சொல்லப்படுகிற வாதங்களையும், முன்வைக்கப்படுகிற ஆதாரங்களையும் புறந்தள்ளிவிடமுடியாது. அமெரிக்க ஆதரவு “ஃப்ரீ சிரியன் ஆர்மி” யிடம் வழங்கப்படும் ஆயுதங்கள் எல்லாம் இறுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமே சென்று சேர்வதைப் பார்க்கமுடிகிறது. நேட்டோ படைகளின் ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன என்று சர்வதேச பொதுமன்னிப்பாயம் அமைப்பு அறிக்கையொன்றையே வெளியிட்டிருக்கிறது.
இஸ்ரேலுக்கு என்ன இலாபம்?
**********
1948 முதலே தங்களது நிலத்திலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே சிரியாவில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதான் ஆதரவளித்துவருகிறது. என்றாவது ஒரு நாள் பாலஸ்தீனம் என்கிற தேசம் உருவாகிவிடும் என்றும், தங்களது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பிச்சென்றுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டே அம்மக்கள் சிரியாவில் வாழ்ந்துவருகின்றனர். சிரியாவை இல்லாமல் செய்துவிட்டால், அங்கிருக்கும் பாலஸ்தீனர்களின் கனவையும் அழித்துவிடுவது எளிதானது என்று இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா அழிக்கப்பட்டுவிட்டால், அங்குவாழும் பாலஸ்தீன அகதிகள் துரத்தப்படுவதும் உறுதி.
சிரியாவின் இராணுவம்தான் இஸ்ரேலுக்கு அப்பகுதியில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது. அதனால், சிரியாவின் தற்போதைய அரசைக் கவிழ்த்துவிட்டாலே, இஸ்ரேல் எவ்வித அச்சமுமின்றி இருக்கலாம் என்று நினைக்கிறது
சிரியாவின் தற்போதைய அரசு தன்னாலான உதவிகளை பாலஸ்தீனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு செய்து வந்திருக்கிறது. அதனால், சிரியாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், பாலஸ்தீன போராட்ட இயக்கங்களை ஒடுக்குவதும் எளிதாகிவிடும் என்பது இஸ்ரேலின் கணக்கு
நீண்ட நாட்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பது இஸ்ரேலின் இலட்சியமாக இருந்துவருகிறது. சிரியா இல்லாமல் போனால், ஹிஸ்புல்லாவை அழிப்பது இஸ்ரேலுக்கு சாத்தியமாகிவிடும்
சிரியாவைத் தகர்த்துவிட்டால், பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரும் கோரிக்கையையே மெல்லமெல்ல அழித்துவிடமுடியும் என்பதும் இஸ்ரேலின் நம்பிக்கை
இப்படியான காரணங்களுக்காக, சிரியாவை இல்லாமல் செய்துவிடுவதை இஸ்ரேல் விரும்புகிறது. இதில் சந்தேகப் பார்வையோடு பார்க்கவேண்டிய இரண்டு முக்கியமான அம்சங்களும் உண்டு.
சிரியாவின் தெற்கு கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சிரியாவில் எண்ணிலடங்கா அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள், இதுவரை அப்பகுதிகளுக்கு ஓரடிகூட எடுத்துவைத்து முன்னேறவுமில்லை, அப்பகுதிகளை மீட்டெடுக்க இஸ்ரேலுடன் சண்டைக்கும் போகவில்லை.
அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து சண்டையிடப்போவதாகவும், காஸாவை ஆக்கிரமிக்கப்போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது.
ஆக, சிரியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களால் இஸ்ரேலுக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஆனால் சிரியா அழிக்கப்பட்டுவிட்டாலோ, அதனால் இஸ்ரேலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.
துருக்கிக்கு என்ன இலாபம்?
முதலாம் உலகப்போருக்கு முன்னர் மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டுவந்தது துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒட்டோமன் பேரரசுதான். மத்திய ஆசியா முதல் சிரியா, எகிப்து வரை ஒட்டுமொத்த பரபப்பளவையும் ஒட்டோமன் பேரரசின் கீழ்தான் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தோற்கடிக்கப்பட்டும் திவாலாக்கப்பட்டும் ஒட்டோமன் பேரரசின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சில அகண்டபாரதம் என்று சொல்லித்திரிவதைப்போல, துருக்கியிலும் அகண்ட துருக்கி என்று பேசித்திரிகின்றனர். மத்திய கிழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர துருக்கி எப்போதும் ஆர்வமாகவே இருந்துவருகிறது. நேட்டோவில் துருக்கி இணைந்திருப்பதால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆயுதபலத்தில் பெரிய நாடாகவும், மத்தியகிழக்கின் அமெரிக்காவாகவும் துருக்கி கருதிக்கொள்கிறது.
சிரியா வீழ்ந்துபோவதால் துருக்கிக்கு மற்றொரு இலாபமும் இருக்கிறது. மத்தியகிழக்கிலேயே மிகப்பெரிய ஆடைத்தயாரிப்புத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் நாடு சிரியாதான். அதன்மீது துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது. சிரியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப்போரில் சிரியாவின் ஆடைத்தொழிற்சாலைகளை நட்டமாக்குவதிலும் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து பிரித்து துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பதற்குமே பல இடைத்தரகர்கள் களத்தில் வேலைசெய்யத்துவங்கியிருக்கிறார்கள்.
சவுதி அரேபியாவிற்கு என்ன இலாபம்?
ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிவருவது சவுதி அரேபியாதான் என்பது உலகறிந்த இரகசியம். சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பூமிக்கடியே குழாய்கள் அமைத்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை எடுத்துச்சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு சிரியாதான் மிகமுக்கியமான பகுதி. சிரியாவின் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, சிரியாவை உடைத்து அதன் ஒரு பகுதியில் தனக்குச் சாதகமான ஓராட்சி அமைந்தாலோ தான் தன்னுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை சவுதிஅரேபியா நன்கு உணர்ந்திருக்கிறது.
அதுதவிர மத்தியகிழக்கின் ஒரே ரவுடியாகவும் அமெரிக்காவின் ஆத்மார்த்த அடியாளாகவும் இருப்பது யார் என்கிற போட்டியில் மற்ற எல்லோரையும்விட முன்னனியில் இருப்பதும், எப்போதும் இருக்கவிரும்புவதும் சவுதிஅரேபியாதான். ஜனநாயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லாத சவுதிஅரேபியா, அமெரிக்காவின் நட்புப்பட்டியலில் இருந்துகொண்டேயிருக்கவே விரும்புகிறது.
சிரியாவின் பிரச்சனை மட்டுமா இது?
சிரியா தகர்க்கப்பட்டால், ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. ரஷியாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்தபின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் ரஷியாவுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், ரஷியா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் ரஷியாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் ரஷியாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்சு, தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்துவரும் அர்ஜெண்டினா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் – இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்துவருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந்திருக்கிறது. நேட்டோ, ஐ.நா.சபை, இசுலாமிய பயங்கரவாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோவின் செலவுகளில் 75% த்தை அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறது. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம்.
லிபியாவை போல சிரியாவையும் எளிதில் தகர்த்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. சிரியாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது; இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்க முடிந்திருக்கிறது. ஆனால், சிரியாவை இன்னமும் ஏகாதிபத்திய அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கமுடியவில்லை. சிறுபான்மை அலவித்களால் ஆளப்படும் சிரியாவினை கைப்பற்றுவது அத்தனை கடினமாக இருக்காது என்றே அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால், சிரியாவின் உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், இராணுவ ஜெனரல்கள், இராணுவப் படையினர் என எல்லா மட்டத்திலும் பொறுப்பிலிருப்பவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், அமெரிக்கா நினைத்ததைப் போல சிரியாவில் சிறுபான்மையினத்தவரின் ஆட்சிக்கு எதிரான பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைக்கமுடியவில்லை.
சிரியாவின் இராணுவத்தை இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோகூட வெல்லமுடியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக இருந்தாலும் இன்னபிற அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும், சிரியாவின் இராணுவத்தை வீழ்த்தாமல் சிரியாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கவே முடியாது. ரஷியாவும் தன்னுடைய வாழ்வா சாவா போராட்டத்தில் சிரியாவுக்கு துணியாக போராடிக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் சிரிய இராணுவத்தோடு இணைந்திருக்கிறார்கள். போரின் உக்கிரத்தைப் பொருத்தவரையில் ஈரானும் சிரியாவுக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வின் சாட்சியங்கள்:
1. 2011 ஆம் ஆண்டில் மார்ச் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட உள்நாட்டு புரட்சியில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2,40,381 ஆகும்.
2.கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 111624 ஆகும்.
3.கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11964 ஆகும்
4.கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7719 ஆகும்.
5.போரில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை 30000 ஆகும்
6.போரில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஆகும் ‘
7.ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20000 ஆகும் .
8.போரினால் காயமுற்று நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் அதாவது 2 மில்லியன் மக்கள் ஆவர் .
9.போரினால் அருகே புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் பேர் அதாவது 7 மில்லியன் மக்கள் ஆவர்
10.அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பித்து ஓடி வந்து பிற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் பேர் அதாவது 4 மில்லியன் என்பது மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்
உணவிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகள்:
1.அகதிகளுக்கு உணவு வழங்கும் நிலைமைகள் நாளடையில்குறைந்து வருகின்றது . நிதிப்பற்றாக்குறையின் காரணமாக உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க பணம் இல்லாமையால் முகாம்களுக்கு வெளியே உள்ள 229000 அகதிகள் உணவின்றி தவித்து வருகின்றனர் .
2.இதன் விளைவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு வேலைக்கு செல்வதும், பணங்களை வசூலிக்க வெளியே செல்வதும் அதிகரித்து வருகின்றது .
3.இதன் படி ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கூற்று படி முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 210000 ஆவர்.
4.முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆவர். இது வரை 1,772,535 சிரியா அகதிகளை துருக்கி வரவேற்று உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன .
ஸ்வீடன் செல்லும் வழியில் கற்பழிக்கப்படும் குழந்தை அகதிகள் :
1.தஞ்சம் புகுவதற்கு ஆதரவு தேடும் சிறுவர் சிறுமிகள் 92 % சதவிகிதம் பேர். அவர்கள் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஆவர் .
2.பெற்றோர்கள் இன்றி அகதிகளாக ஸ்வீடன் வரும் குழந்தைகள் வாரம் தோறும் சுமார் 700 பேர் வருகை தருகின்றனர். அகதிகளாக வரும் குழந்தைகள் கடத்தல்காரர்களால் கற்பழிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உடல் ரீதியான மற்றும் மனம் ரீதியான காயங்களுக்கு ஆளாகின்றனர்.
3.அகதிகளாக வரும் குழந்தைகள் பலரும் எலும்புகள் முறிந்த நிலையிலும் , தலையில் தாக்கப்பட்டு காயங்களுடனும் வருகின்றனர். நாடு கடத்தபப்டும் குழந்தைகள் பண்டமாற்றுவண்டிகளில் அழைத்து வரும் போது விழுவதாகவும் , குழந்தைகள் கனனத்தில் அறைந்து காத்து கேட்கும் தன்மை இழப்பதாகவும் செய்திக் குழுக்கள் தகவல் அழிப்பது வேதனையாக இருக்கின்றன .
சிரியாவில் நடக்கிற போரானது, இரண்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடயிலான போரல்ல. உலகில் தன்னுடைய அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கிற அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய நாட்டிற்கும், தேசியவாத சக்திகளுக்கும் இடையிலான போர்.
உலகை தனது காலனியாக்கத்துடிக்கும் அமெரிக்காவிற்கும், சொந்த நிலத்தை பாதுகாக்கப் போராடும் சிரியாவின் மக்களுக்கும் இடையிலான போர். 1917ஆம் ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்களின் சொத்தாக உருவாகிக்கொண்டிருந்த ரஷியாவை 1990களில் தகர்த்து, சூறையாடிய வரலாறு, மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிற ரஷியாவின் வாழ்க்கைப் போராட்டம்தான் இப்போர்.
 
– ஈழத்து நிலவன் –

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More