இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்பிய நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது எனவும் இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவி செய்தமைக்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பில் டெல்லியில் உள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரத்தினை முன்னலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை இன்று மாலை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது