சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆன்மீக பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிபெறச்செய்வது சவால் நிறைந்தது என்றபோதும் பல்வேறு துறைகளினூடாக அதற்கு ஊக்கமளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியீடு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட ‘மூவர்’ திரைப்பட வெளியீட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நல்லிணக்கம் தொடர்பான விரிவான தேசிய கொள்கையொன்றின் தேவையை நிறைவேற்றும் வகையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இத்தகையதொரு கொள்கை வெளியிட்டு வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும் இத்திரைப்படம் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக அனுபவிக்கும் மனவேதனைகளை உருக்கமாக முன்வைத்து சமூகத்திற்கு செய்தியொன்றை வழங்குவதுடன், இலங்கை மக்கள் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசாங்க அதிகாரிகள், கலைஞர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.