தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன்
வீதியில் செல்கையில்,
சலவை தூளால் தோய்த்து
உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத
வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி
நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை,
திருடன் என்றோம்
மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த
வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு.
தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை
இரண்டு கவளம் அரிசிக்காக
குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம்.
கனிகளை எமக்குப் பரிசளித்தவனை
ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி
உடலைக் கிழித்து
பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்டோம்
ஒரு வாழைப்பழத் துண்டையும்
சில காட்டுப் பழங்களையும்.
மீந்திருந்ததுவோ பூமியை இழந்த
ஆதிவாசியினது இருளும் பசியும் படிந்த கண்களும்
கோதுமை என சந்தேகிக்கப்பட்டு
தேகம் எங்கும் அப்பியிருந்த
அழுக்கு எனப்பட்ட வனப் புழுதியும்.
தீபச்செல்வன்