இறுதி யுத்தத்தில் வன்னியில் காணப்பட்ட கொத்தனிக் குண்டுகள்…
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச படையினர் கொத்தணி குண்டுகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தியதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொத்தணி குண்டுகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட உள்ள நிலையில் இதனைத் தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பிலான யோசனையை அமைச்சரைவயில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார்.
கொத்தணி குண்டுகளை தடை செய்வது குறித்த சர்வதேச பிரகடனத்தில் 102 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. கொத்தணி குண்டுகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், அதன் பயன்பாட்டை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும் அரசாங்கம் கடந்த ஆண்டில் கொத்தணி குண்டுகளுக்கு எதிரான மாநாட்டில் தெரிவித்திருந்தது.
பொதுமக்களை பாதுகாப்பதே பிரதான இலக்காக அமைய வேண்டுமென இலங்கை தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச அமைப்புக்களும் ஊடகங்களும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.