இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள உயரதிகாரி மேரி கத்தரின் பீ ( Mary Catherine Phee ) தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறும் ஈரான் போன்ற நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் போன்ற நாடுகளின் விடயத்தில் ஒருவிதமாகவும் பாரபட்சமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடந்து கொள்கிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏனைய உறுப்பு நாடுகளில் இருந்து இஸ்ரேலை வேறுபட்ட முறையில் கையாளுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர் இலங்கை , வடகொரியா, ஈரான், மியான்மார், தென்சூடான், சிரியா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவை பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயம் போன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் வலுவான தீர்மானங்களை நிறைவேற்ற ஒன்றாக முன்வரும் என அமெரிக்கா நம்பவதாகவும் இலங்கை விடயத்தில் அவ்வாறு ஒன்றுபட்டிருந்ததால்தான் இலங்கை முன்னேற்றங்களைச் செய்வவதாக உறுதியளித்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.