தமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று வருடத்தினை பூர்த்தி செய்துள்ளது. இந்தநிலையில் இன்று தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவற்காக நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அழைப்பு விடு;த்திருந்தனர்.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் இன்று சந்தித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, இந்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் ஜனாதிபதியும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தென்பகுதியில் நிலவும் அரசியல் குழப்பநிலை காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சாதகமான தீர்வுகளை எட்டமுடியாத நிலை ஏற்படுமிடத்து மாபெரும் வெகுஜன போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் அரைமணி நேரம் தியானம் மேற்கொண்டதோடு, போராட்ட கூடாரம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஒருபகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது